×

திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சீர்கேடு: அச்சத்தில் பாதசாரிகள்

ஆவடி, டிச. 30: ஆவடி அருகே திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையில் பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால், அந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.    ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, இச்சாலை வழியாக தான் ஆவடி பகுதியில் உள்ள ராணுவத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், இந்திய உணவுக்கழகம், ரயில்வே பணிமனை ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் தினமும் சென்று வருகின்றனர். மேலும், இச்சாலையை பயன்படுத்தி  புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரியில்  படிக்கும் மாணவ- மாணவியர்களை ஏற்றிக் கொண்டு நூற்றுக்கணக்கான பேருந்துகளும் சென்று வருகின்றன.  

இச்சாலை அமைந்துள்ள  திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர் நுழைவு வாயில் அருகில் முடங்கி கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் சமூக விரோதிகள் திருட்டுத்தனமாக கழிவுநீர் (செப்டிக் டேங்க் கழிவுகள்) இணைப்பு கொடுத்துள்ளனர். இதில் இருந்து கடந்த இரு மாதங்களாக கழிவுநீர் ஆறாக சி.டி.எச் சாலையில் ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மேற்கண்ட பகுதியில் உள்ள சி.டி.எச் சாலையில் கனரக வாகனங்கள் செல்லும் போது கழிவு நீர் சிதறி இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது விழுகின்றன. இதனால் பாதசாரிகளின் உடைகள் பாழாகிறது. மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகள் கழிவு நீரில் வழுக்கி விழுந்து காயமடைக்கின்றனர். இதோடு மட்டுமில்லாமல், வெளியேறும் கழிவு நீரால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. சரஸ்வதி நகர் சந்திப்பில் சேதமடைந்த சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் உள்ள பள்ளம் தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் பலனில்லை.  எனவே, மாநகராட்சி  அதிகாரிகள் கவனித்து ஆவடி பகுதியில் முடங்கிக் கிடக்கும் பாதாளசாக்கடை திட்டத்தில் கழிவுநீரை  (செப்டிக் டேங்க் கழிவுகள்) திருட்டுத்தனமாக  இணைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Pedestrians ,
× RELATED அம்பத்தூர்- செங்குன்றம்...