×

சேவை குறைபாடு வாகன விற்பனையகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கோவை, டிச.30:சேவை குறைபாடு காரணமாக தனியார் இரு சக்கர வாகன விற்பனையகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கோவை, கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஆனந்த்ராஜா, இவர் கடந்த 2012 மார்ச் மாதம் கோவையில் உள்ள தனியார் வாகன விற்பனையகத்தில் பைக் வாங்கியுள்ளார். பின் ஜூன் மாதம் அதே விற்பனையகத்தில் சர்வீசுக்கு விட்டுள்ளார். அப்போது இன்ஜின் ஆயில் மாற்றியதற்காக ரூ.320 வசூலிக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் வாகனத்தில் இருந்து சத்தம் வந்துள்ளது. தொடர்ந்து இன்ஜின் இயக்கம் நின்றுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள பழுது பார்க்கும் மையத்தில் வாகனத்தை பரிசோதித்தபோது இன்ஜின் ஆயில்  மாற்றாமல் விற்பனையகம் தந்ததும், ஆயில் இல்லாமல் இயங்கியதால் கோளாறு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இது குறித்து ஆனந்த்ராஜா சம்பந்தப்பட்ட விற்பனையக பழுதுபார்க்கும் மையத்திடம் கேட்டும் விற்பனையகம் சார்பில் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் உரிய இழப்பீடு கேட்டு கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த கோவை நுகர்வோர் ஆணைய தலைவர் பாலச்சந்திரன், உறுப்பினர் பிரபாகர் ஆகியோர் வாடிக்கையாளருக்கு சேவை குறைபாட்டை ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரம் இழப்பீடாக வழங்கவும், வழக்கு செலவுக்கு ரூ.3 ஆயிரத்தை வழங்கவும் வாகன விற்பனையகத்துக்கு உத்தரவிட்டனர்.

Tags : vehicle dealer ,
× RELATED தனியார் வாகன விற்பனையகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்