×

செல்லம்பட்டியில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி, டிச. 29: திருமங்கலம் பிரதானக்கால்வாயில் தண்ணீர் திறக்ககோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரை செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு இப்பகுதிகளில் உள்ள கண்மாய்களில் தண்ணீரில்லை. இதனால் தற்போது திருமங்கலம் பிரதானக்கால்வாயில் வரும் வைகை அணை தண்ணீரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை திறந்து விடக்கோரி சாலை மறியலில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் முன்கூட்டியே போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
அதன்படி செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு மதுரை - உசிலம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ் உள்ளிட்ட போலீசார் தடுத்து நிறுத்தி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாசனவிவசாயிகள் சங்கத்தலைவர் அம்மட்டையன்பட்டி ஜெயராமன்,  பாசனக்கோட்டத்தலைவர் மேட்டுப்பட்டி பழனி தலைமை வகித்தனர். ஊர்த்தலைவர்  ராமன், வாகைக்குளம் தங்கராஜ், ராஜா, உச்சப்பட்டி வழக்கறிஞர் நடராஜன்,  உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.பொதுப்பணித்துறை தொடர்ந்து  நடவடிக்கை எடுக்காத போது இப்பகுதியிலுள்ள அனைத்து கிராமவிவசாயிகளையும்  ஒன்றிணைத்து போராடப்போவதாகத் தெவித்துள்ளனர். அப்போது விவசாயிகள் கூறுகையில்,  செல்லம்பட்டி பகுதிகளிலுள்ள ஆரியபட்டி, உச்சபட்டி, நாட்டாமங்கலம்,  வலங்காகுளம், வாகைக்குளம், அம்மட்டையம்பட்டி, சிந்துபட்டி, செம்பட்டி,  கன்னியம்பட்டி, பெருமாள்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட கண்மாய்களுக்கு  திருமங்கலம் பிரதானக்கால்வாயில் இருந்து வரும் தண்ணீரைத்தான்  நிரப்ப வேண்டும். ஆனால், தற்போது தண்ணீரை நிறுத்தி விட்டனர். இதனால்  இப்பகுதியிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

Tags :
× RELATED உலக கால்நடை தின விழா