×

குளித்தலை 5வது வார்டு தி.மு.க மாவட்ட கவுன்சில் வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து செந்தில்பாலாஜி பிரசாரம்

குளித்தலை, டிச. 27: கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் 5வது வார்டு தி.மு.க மாவட்ட கவுன்சில் வேட்பாளர் பொய்யாமணி தேன்மொழி தியாகராஜன், 8வது வார்டு ஒன்றிய கவுன்சில் வேட்பாளர் நித்யா ராமசாமி ஆகியோரை ஆதரித்து கரூர் தி.மு.க மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரிக்க பொய்யாமணிக்கு வந்தார். அப்போது ஆயிரக்கணக்கானோர் அதிர்வேட்டுகள் முழங்க வரவேற்று ஆதரவு தெரிவித்தனர். அப்போது செந்தில்பாலாஜி பொதுமக்களிடையே பேசியதாவது:

5-வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராக உள்ள தேன்மொழி தியாகராஜன் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவராக இருந்துள்ளார். அவரது கணவர் தியாகராஜன் குளித்தலை ஒன்றிய குழு தலைவராக இருந்துள்ளார். அதனால் பொதுமக்களிடையே நன்கு அறிமுகமானவர்கள். கிராமப்புற ஏழை எளிய மக்களின் அடிப்படை வசதிகளை மக்கள் கோரிக்கைகளை ஏற்று உடனுக்குடன் செய்து தரும் தகுதி படைத்தவர்கள். அதனால் அவருக்கும், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிடும் நித்யாராமசாமிக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

குளித்தலை ஒன்றியத்தை பொறுத்தளவில் கிராமபுறங்களில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் அ.தி.மு.க அரசு காலம் தாழ்த்தி வந்தது. பின்னர் தற்போது நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு தேர்தல் நடைபெறுகிறது. குளித்தலை தொகுதியை பொறுத்த வரையில் நாம்தாம் ஆளுங்கட்சியாக செயல்படுகிறோம். ஏனென்றால் பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர் நம் கூட்டணியில் வென்றவர். அதேபோல் ராமரும் தி.மு.க எம்.எல்.ஏ ஆவார். வரும் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சில் வேட்பாளர் வெற்றி பெறுவதோடு குளித்தலை ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்றுவதும் தி.மு.க தான்.

அதனால் தி.மு.க தொண்டர்கள் அயராது வெற்றிக்கு பாடுபட வேண்டும் என பேசினார். இதில் எம்.எல்.ஏ ராமர், தேர்தல் பொறுப்பாளர், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா, ஒன்றிய செயலாளர் சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், பேரூர் நகர செயலாளர்கள் ஏணி சுந்தரம், ரவீந்திரன், முன்னாள் துணைத்தலைவர் முத்து, சரவணன், சங்கர், கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ward ,DMK ,District Council ,
× RELATED மறைமலைநகர் நகராட்சியில் என்எச்...