×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் நடை அடைப்பு

காஞ்சிபுரம், டிச.27: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சூரிய கிரணத்தை முன்னிட்டு நேற்று 1000க்கும் மேற்பட்ட கோயில்கள் நடை அடைக்கப்பட்டன. மாலையில், அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சந்திரன் பூமியையும், பூமி சூரியனையும் சுற்றி வருகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன்- சந்திரன் - பூமி ஒரே நேர்கோட்டில் சேரும்போது சூரிய கிரகணம் என்ற நிகழ்வு ஏற்படுகிறது. இதுபோல் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழ்வுகள் ஏற்படும்போது அனைத்து கோயில்களின் நடைகளும் சாத்தப்படுவது வழக்கம். கிரகணம் முடிந்த பின்னர் கோயில்களை சுத்தம் செய்து, மீண்டும் பூஜைகள் நடத்தப்படும். அதன்படி நேற்று சூரிய கிரகணம் ஏற்பட்டதால், காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், உலகளந்த பெருமாள், குமரகோட்டம் முருகன் ஆகிய கோயில்கள் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 1000க்கும் மேற்பட்ட கோயில்களின் நடை அடைக்கப்பட்டன. சூரிய கிரகணம் முழுமையாக முடிந்த பின்பு மாலை சுமார் 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்து, அதன் பின்னர், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

திருக்கழுக்குன்றம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கல்பாக்கம் கடற்கரைக்கு அருகே தொலைநோக்கி கருவி மூலம் பொதுமக்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சிறுவர், சிறுமிகள் உட்பட 2000க்கும் மேற்பட்டோர் நேற்று காலை நிகழ்ந்த சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை வானிலை நிபுணர்கள் பார்த்தசாரதி, வெங்கடேஷ் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் வீரன், சிவஞானசம்பந்தம், ஜெயவேல் ஆகியோர் செய்தனர். மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 17 இடங்களில் சூரிய கிரகணத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, சூரிய கிரகணம் பற்றிய விளக்கத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர். செய்யூர்: செய்யூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலை நைனார் குப்பம் கடற்கரையோரம் காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் விசேஷ கருவிகள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் சூரிய கிரகணத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் செய்யூர், கடப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் சூரிய கிரகணத்தை கண்டனர்.

Tags : temples ,Kanchipuram district ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா