×

இன்டர்நெட்டில் இருந்து குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளனர் சிபிஐ அலுவலகம் பெயரில் பணி நியமன ஆணை

வேலூர், டிச.27: இன்டர்நெட்டில் இருந்து செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதோடு, சிபிஐ அலுவலகம் பெயரில் போலியாக பணி நியமன ஆணை வழங்கியது பிடிபட்ட போலி சிபிஐ அதிகாரிகளிடம் நடந்த போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் போலி சிபிஐ அதிகாரிகளாக வலம் வந்து மோசடியில் ஈடுபட்ட காட்பாடி அடுத்த கழிஞ்சூரை சேர்ந்த அரிஹரன்(30), விருதம்பட்டை சேர்ந்த ரசூல் மத்தீன்(42) ஆகிய 2 பேரையும் விருதம்பட்டு போலீசார் கடந்த 16ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் 4.70 லட்சம், சீருடைகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், ரசூல் மத்தீன், அரிஹரன் ஆகிய 2 பேரும் சிபிஐ அலுவலகத்தில் ஊழியராகவும், வேலூர் கோர்ட்டில் காவலாளியாகவும் வேலை வாங்கி தருவதாக கூறி 80 ஆயிரம் முதல் 1.50 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்ததாக 21 பேர் கடந்த வாரம் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதுதவிர திருவலம் போலீஸ் நிலையம் உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகிறது. இதனால் இவ்விஷயம் தொடர்பாக, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மோசடியில் பாதிக்கப்பட்ட சிலருக்கு சிபிஐ அலுவலகம் பெயரில் வீட்டின் முகவரிக்கு போலியாக பணி நியமன ஆணை அனுப்பி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், போலி சிபிஐ அதிகாரிகள் விவகாரம் விஸ்வ ரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கைதான போலி சிபிஐ அதிகாரிகள் ரசூல்மத்தீன், அரிஹரன் ஆகியோர் சிபிஐ அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் வசூலித்துள்ளனர். பணம் கொடுத்தவர்களுக்கு போலி பணி நியமன ஆணையும் அனுப்பியுள்ளனர். மேலும் இன்டர்நெட்டில் இருந்து சிபிஐ அலுவலகம் பெயரில் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. போலியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்ட பிறகு, ‘உனக்கு வேலை உறுதியாகிவிட்டதால், அழைக்கும்போது பணியில் சேர்ந்து கொள்ளலாம். இதற்கு ஓராண்டு கூட ஆகலாம். அதுவரை யாருக்கும் வேலை உறுதியானதை சொல்ல வேண்டாம். வேலைக்கு சென்றாலும் ரகசியமாக இருக்க வேண்டும். சிபிஐ அலுவலக பணி என்பது ரகசியம் காக்கப்பட வேண்டிய ஒன்று’ என்று கூறியுள்ளனர். இதனால், பணி நியமன ஆணையை ரகசியமாக வைத்திருந்துள்ளனர்.

போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவர்களும் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பணி நியமன ஆணை போலி என்பதை அறியாதவர்கள், வேலை கிடைத்துவிட்டதாக நினைத்து அதிக வரதட்சணையுடன் திருமணம் செய்ய பெண் பார்க்கவும் தொடங்கியுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட 2 பேரை தவிர்த்து மேலும் சிலர் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. யாராவது புகார் அளித்தால் ரகசியமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags :
× RELATED 9 வயது சிறுவன் திடீர் தற்கொலை குடியாத்தம் அருகே அதிர்ச்சி