×

திருத்தங்கல் குளத்தில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

சிவகாசி, டிச. 25:  திருத்தங்கல்லில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ள குளத்தை, தூவார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தங்கல் நகராட்சியில் உள்ள 14வது வார்டில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இப்பகுதியின் நிலத்தடி நீராதாரமாக குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் தூர்வாரப்படாமலும், கழிவுநீர் தேங்கியும் காணப்படுகிறது. இதில் கொசுக்கள் உருவாகி, பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது. குளத்தைச் சுற்றி குப்பைகள், மாமிச கழிவுகள் கொட்டப்படுகிறது. குளத்தை சுற்றி சிதறிக்கிடக்கும் குப்பைகள் வீடுகளுக்குள் காற்றில் பறந்து வருகின்றன.

இந்நிலையில், குளத்தில் ஆகாயதாமரை வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது.  ஒரு சொட்டு தண்ணீர் கூட தெரியாத அளவு ஆகாயத்தாமரை உள்ளது.  குளம் அருகே உள்ள ரேசன் கடை பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.  மேலும் இந்த குளம் அருகே இரண்டு சுகாதார வளாகங்கள் உள்ளன. இவைகள் பூட்டிக் கிடக்கின்றன. இதனால், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.  எனவே, குளத்தை தூர்வாரி கழிவுநீர் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கலெக்டர் அலுவலகம் முன் ஊதியம் கோரி தர்ணா போராட்டம்