×

குடியுரிமை சட்டத்தை வாபஸ் ெபறக்கோரி ரயில் மறியல் போராட்டம் நடத்திய 58 பேர் கைது

மதுரை, டிச. 25:  குடியுரிமை சட்ட மசோதாவை திரும்ப ெபற வலியுறுத்தி மதுரையில் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினர் 58 பேரை போலீசார் கைது செய்தனர். குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசையும், இச்சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசையும் கண்டித்தும், இச்சட்டத்தை திரும்ப பெற கோரியும் ஆதித்தமிழர் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர். இதனையடுத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை ரயில் நிலையத்தில் நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்கிடையே, காலை 9 மணி அளவில், பெரியார் பஸ்ஸ்டாண்ட் அருகிலுள்ள கட்டபொம்மன் சிலை முன்பு, ஆதித்தமிழர் கட்சியினர் திரண்டனர். கட்சித் தலைவர் ஜக்கையன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், அங்கிருந்து ஊர்வலமாக ரயில் நிலையம் நோக்கி வந்தனர். அங்கு, மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

 இதனையடுத்து, ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்காக, அங்கு தடுப்பாக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளில் ஏறி, ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அங்கிருந்த போலீசார் இவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே சிலர் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கட்சித் தலைவர் ஜக்கையன், மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன், நிதி செயலாளர் விடுதலை வீரன், தலைமை நிலைய செயலாளர் விஸ்வை குமார், அமைப்பு செயலாளர் திலீபன் உட்பட 58 பேரை போலீசார் கைது செய்து, குண்டுக்கட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றினர்.

Tags :
× RELATED சோழவந்தானில் உலக நன்மை வேண்டி யாக பூஜை