×

குப்பை சேகரிப்பு மையமான பழநி வையாபுரி குளம்

பழநி, டிச. 25: பழநி வையாபுரி குளம் குப்பைகள் சேகரிப்பு மையமாக மாறியதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். பழநி நகரின் மையப்பகுதியில் வையாபுரி குளம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீராடி சென்று கொண்டிருந்த இக்குளம் அதன்பின் தனது அடையாளத்தை இழக்க துவங்கியது. பழநி நகரின் ஒட்டுமொத்த கழிவுநீரும் வையாபுரி குளத்தில் கலந்ததால் மினிகூவமாக உருமாறியது.

இக்குளம் தனது பழைய நிலையை அடைய பழநி நகரின் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவது ஒன்றே வழி என்ற நிலை தற்போது உருவாகி உள்ளது. இதுதொடர்பாக கடந்த திமுக ஆட்சியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் பார்வைக்குக்கூட அனுப்பப்பட்டு நிதி ஒதுக்கீடும் பெறப்பட்டது. ஆனால், அதன்பின் வந்த அதிமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இத்திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. இதனால் பழநி நகரின் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தற்போது பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பழநி வையாபுரி குளம் குப்பை சேகரிக்கும் மையமாக தற்போது மாற்றப்பட்டு வருவது பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. வரதமாநதி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் தற்போது வையாபுரி குளம் நிரம்பி உள்ளது. ஐயப்ப பக்தர்கள் சீசன் காரணமாக பழநி வரும் பக்தர்களிடம் வியாபாரம் செய்ய ஏராளமான வியாபாரிகள் அடிவாரத்தை முற்றுகையிட்டுள்ளனர். இவர்கள் தங்களது அட்டை கழிவுகள், குப்பைகள், இளநீர் குடித்து விட்டு போடும் தேங்காய் தொட்டிகள் போன்றவற்றை தள்ளுவண்டிகளில் எடுத்து வந்து வையாபுரி குளத்தில் கொட்டி விடுகின்றனர்.

இதனால் குளத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் மாசடைந்து வருகின்றன. எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வையாபுரி பைபாஸ் சாலையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்க வேண்டுமென பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Garbage collection center ,Palani Vayapuri ,pond ,
× RELATED வெள்ளக்கல் குப்பை கிடங்கில் பற்றியது தீ