சேலம், டிச.24: சேலம் மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் பணிபுரியும் அலுவலர் குழு ஒதுக்கீடு செய்யப்பட்டது.தமிழக ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில், 12 ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாகவும், 8 ஒன்றியங்களுக்கு 2ம் கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படுகிறது. இரு கட்டங்களிலும் 2,741 வாக்குச்சாவடிகளில், தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணிகளில் ஈடுபட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 21,600 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் கடந்த 15ம் தேதியும், 2ம் கட்ட பயிற்சி கடந்த 21ம் தேதியும், மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்தது.இரண்டாம் கட்ட பயிற்சியில், வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள அலுவலர்கள் குழு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தேர்தல் நடவடிக்கைகள் குறித்த பல்வேறு வழிகாட்டுதல்களை கலெக்டர் ராமன், அதிகாரிகளுக்கு வழங்கினார். குறிப்பாக, மண்டல அலுவலர்கள் வழங்கும், வாக்குப்பதிவிற்கான பொருட்கள் அனைத்தும் இருக்கின்றதா என்பதை சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பூர்த்தி செய்து வழங்கவேண்டிய அனைத்து படிவங்களையும், விடுபடாமல் கட்டாயம் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பம் இடவேண்டும் என அறிவுறுத்தினார்
