×

உப்பாறு ஓடையில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

உடுமலை, டிச.24:  உப்பாறு ஓடையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் கோமங்கலம்புதூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் வழியாக தாராபுரம் பகுதியில் உள்ள உப்பாறு அணைக்கு சென்று சேருகிறது. சுமார் 45 கி.மீ. நீளமுள்ள இந்த ஓடையில், மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் செல்கிறது. உப்பாறு அணை மூலம் தாராபுரம் பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. பிஏபி கால்வாயில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் செல்ல ஷட்டர் உள்ளது. இருப்பினும், பிஏபி பாசன திட்டத்தில் உப்பாறு அடை இல்லாததால் தண்ணீர் திறக்கப்படுவதில்லை. திருமூர்த்தி அணை நிரம்பிய நிலையில், உபரி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. இதுதொடர்பாக, பிஏபி மற்றும் உப்பாறு அணை பகுதி விவசாயிகளிடையே கருத்து வேறுபாடு உள்ளன.

மழைக்காலங்களில் உப்பாறு ஓடையில் செல்லும் தண்ணீர், 15க்கும் மேற்பட்ட தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. உப்பாறு ஓடை முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது.  இதனால் மழைக்காலத்தில்கூட தண்ணீர் செல்ல முடியாதவாறு கருவேல மரங்கள் உறிஞ்சிவிடுகின்றன. இதனால், அணைக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. ஏற்கனவே, தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும் உப்பாறு அணை பகுதி விவசாயிகள், கருவேல மரங்களால் மேலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, உப்பாறு ஓடை முழுவதும் நிறைந்துள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Upparu ,stream ,
× RELATED விமானத்தில் பயணம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்