×

பல்லாவரம் அருகே அதிகாலையில் தண்டவாளத்தில் விரிசல்

பல்லாவரம்: பல்லாவரம் அருகே நேற்று அதிகாலை ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், சிறிது நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. உரிய நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரிய அளவில் விபத்து தவிர்க்கப்பட்டது. தாம்பரம் - சென்னை கடற்கரை ரயில் தடத்தில் தினசரி நூற்றுக்கணக்கான மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதேபோல், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இந்த வழித்தடத்தில்தான இயக்கப்படுகின்றன. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு மின்சார ரயில் ஒன்று புறப்பட்டது. இதில், ஏராளமானோர் பயணித்தனர். இந்த ரயில் பல்லாவரம் வந்தபோது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்ட ரயில் ஓட்டுநர், இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனால், அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க அந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. தகவலறிந்து ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தபோது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, காலை 6 மணிக்கு மேல், அந்த வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. ரயில் தண்டவாள விரிசலால் சுமார் நாற்பது நிமிடம் பயணிகள் காத்துக் கிடந்தனர். முன்னதாக ரயில் தண்டவாள விரிசல் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘பனிக்காலத்தின் போது தண்டவாளத்தில் இது போன்று விரிசல் ஏற்படுவது வழக்கம். இதனால், ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags : Pallavaram ,
× RELATED சலுகை விலை அறிவிப்பால் துணிக்கடையில்...