×

சாயப்பட்டறைகளில் இன்று முதல் ஆய்வு துவக்கம் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டை கண்காணிக்க சப் மீட்டர்

பள்ளிபாளையம்,  டிச.19:  பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியில் உள்ள  சாயப்பட்டறைகளில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுவதை  கண்டுபிடிக்க, சப் மீட்டர் பொருத்தும்படி மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள்  உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக இன்று(19ம்தேதி) முதல் சாயப்பட்டறைகளை  கண்காணிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம்,  பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் 60 அனுமதி பெற்ற  சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த சாயப்பட்டறைகளின் மூலம், திருப்பூர்  பனியன் துணிகள், பருத்தி நூல்கள் போன்றவற்றுக்கு சாயமேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாசு கட்டுப்பாடு வாரிய  அதிகாரிகள், சாயப்பட்டறைகளின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும்  பொருட்டு, சாயப்பட்டறை உரிமையாளர்கள் கூட்டத்தை பள்ளிபாளையத்தில்  நடத்தினர். இதில், குமாரபாளையம் மாசுகட்டுப்பாடு சுற்றுச்சூழல் பொறியாளர்  சாமிநாதன் பங்கேற்று பேசியதாவது:

சாயப்பட்டறைகள்,  சாயமிடும் பணிக்கு அனுமதி பெற்றுள்ள  அளவிற்கு மட்டுமே, கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். மேலும், கழிவுநீரை  சுத்திகரிக்க மாசு கட்டுப்பாடு வாரியத்தில் அனுமதி பெறப்பட்ட தரமான  இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற இயந்திரங்களை பயன்படுத்த  கூடாது. சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்ந்து இயங்கி, கழிவுநீரை  சுத்தப்படுத்த வேண்டும். கழிவுநீரை சுத்தப்படுத்துவது தொடர்பாக, சில புகார்கள் எழுகின்றன. எனவே, சாயப்பட்டறைகளில் உள்ள  சுத்திகரிப்பு  நிலையங்களின் செயல்பாட்டினை கண்காணிக்க, அனைத்து சுத்திகரிப்பு  நிலையங்களிலும், மின்சார பயன்பாட்டிற்கு சப் மீட்டர்களை பொருத்த  வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து சுத்திகரிப்பு  நிலையங்களில் சப் மீட்டர் பொருத்தும் பணிகள், பல சாயப்பட்டறைகளில்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று(19ம்தேதி) முதல் சாயப்பட்டறைகளில்  மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், சப்மீட்டர் பொருத்தி சுத்திகரிப்பு  நிலையங்கள் முறையாக இயங்குகிறதா என கண்காணிக்கும் பணியை மேற்கொள்ள  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அளவுக்கு அதிகமான கழிவுநீரை  வெளியேற்றும் சாயப்பட்டறைகள், அங்கீகாரமில்லாத சாய சுத்திகரிப்பு  இயந்திரங்கள், சப் மீட்டர் பொருத்தாத சுத்திகரிப்பு நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால்,  பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள சாயப்பட்டறை உரிமையாளர்கள்  கவலையடைந்து உள்ளனர்.

Tags : launch ,refinery ,dye fields ,inspection ,
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!