×

சானமாவு வனப்பகுதியில் 10 யானைகள் முகாம் நெடுஞ்சாலையில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும்

ஓசூர், டிச.19:  ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 10 யானைகள் முகாமிட்டுள்ளதால், மாநில நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஓசூர் வனப்பகுதியில் 70க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு பல குழுக்களாக பிரிந்து சுற்றி வருகின்றன. இந்த கூட்டத்தில் இருந்த 40க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. மேலும் 30க்கும் மேற்பட்ட யானைகள் சானமாவு, போடூர்பள்ளம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன. இந்த கூட்டத்தில் 3 குட்டிகளுடன் சுற்றி திரிந்த 12 யானைகள், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடந்து சூளகிரி வனப்பகுதிக்கு சென்றன. அங்கிருந்து கர்நாடக மாநிலம் கோலார் வனப்பகுதிக்கு சென்று முகாமிட்டுள்ள நிலையில், தற்போது அப்பகுதியில் ராகி அறுவடை செய்யப்பட்டு வருவதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஓசூர் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 10க்கும் மேற்பட்ட யானைகள் ராமாபுரம், போடூர், கோபசந்திரம், பேரண்டப்பள்ளி வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் ராகி, சோளம், நெல் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘ஓசூர் சானமாவு வனப்பகுதியில் யானைகள் உள்ளதால், ஓசூர்-ராயக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். வனப்பகுதியை ஒட்டிய ராமாபுரம், பீர்ஜேப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் விளைநிலங்களுக்கு செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், கால்நடை மேய்க்கவும், விறகு பொறுக்கவும் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம்,’ என்றனர்.

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே காடுலக்கசந்திரம், மேகலகவுண்டனூர், திம்மசந்திரம், லிங்கதீரணப்பள்ளி, மாரசந்திரம் ஆகிய கிராமங்களில் நேற்று முன்தினம் வந்த 40 யானைகள், தக்காளி, ராகி, சோளம் பயிர்களை நாசம் செய்தன. தகவலறிந்து சென்ற வனத்துறையினர், பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். யானைகளை தங்களது விளைநிலங்கள் வழியாக விரட்ட கூடாது என விவசாயிகள் தடுப்பதால், யானைகளை ஒருங்கிணைந்து விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். தொடர்ந்து 4 நாட்களாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே, சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : forest ,highway ,Sanaamau ,
× RELATED கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கனமழை..!!