×

ஊரக உள்ளாட்சி தேர்தல் குமரியில் 15 பறக்கும்படைகள் அமைப்பு நாளை முதல் சோதனையில் ஈடுபடுகின்றனர்

நாகர்கோவில்: ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்க 15 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் மற்றும் பரிசீலனை முடிந்துள்ளது. இந்தநிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (19ம் தேதி) மாலையில் வெளியாக உள்ளது. அதன் பின்னர் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும். இந்தநேரத்தில் கட்சியினரால் வாக்காளர்களை கவரும் வகையில் பணம், பரிசு பொருட்கள் விநியோகம் நடக்கிறதா என்பதை கண்காணிக்க, குமரி மாவட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவு துறை, வேளாண்மை துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் வீடியோகிராபர் அடங்கிய 15 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்கள் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவர். இதற்காக 8 மணி நேரத்துக்கு ஒரு குழு வீதம், நாள் முழுவதும் பறக்கும் படை குறிப்பிட்ட மண்டலத்தில் கண்காணிப்பில் இருக்கும்.
இவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோரை கண்காணித்தல், பணம், பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர். இதற்காக பறக்கும் படையில் உள்ள போலீசாருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. குமரி மாவட்டம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் அகஸ்தீஸ்வரம், தோவாளை வட்டாரங்கள் ஒரு மண்டலமாகவும், ராஜாக்கமங்கலம் வட்டாரம் ஒரு மண்டலமாகவும், குருந்தன்கோடு, தக்கலை வட்டாரங்கள் ஒரு மண்டலம் ஆகவும், மேல்புறம், திருவட்டார் வட்டாரங்கள் ஒரு மண்டலம் எனவும், கிள்ளியூர், முன்சிறை வட்டாரங்கள் ஒரு மண்டலம் எனவும் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு மண்டலத்திற்கு மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பணி ஓய்வு பெற்றவருக்கும் பறக்கும்படையில் பணி
பறக்கும்படை குழுவில் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் வருவாய்துறை அதிகாரிகளில் ஒருவரது தலைமையில் ஒரு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர், இரண்டு ஏட்டுகள், அரசு துறைகளில் ஒரு வாகனம் டிரைவருடன் என்ற அடிப்படையில் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் வீடியோ கிராபரும் சேர்ந்து கொள்வார். நேற்று பயிற்சி முடிந்ததும் அதில் பங்கேற்ற போலீசாருக்கு தாங்கள் பணியாற்ற வேண்டிய குழு, மண்டலம், அதிகாரிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அதனை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டுப்பெற்றுக்கொண்டனர். இதில் குருந்தன்கோடு-தக்கலை மண்டலத்தில் அமைக்கப்பட்ட குழு ஒன்றில் நியமிக்கப்பட்டுள்ள வேளாண்மை துறை அதிகாரி ஒருவர் ஏற்கனவே பணி ஓய்வு பெற்றுவிட்டார் என்பது தெரியவந்தது. அவருக்கும் பறக்கும்படையில் பணி ஒதுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் தகவல் அறிந்த அவர் இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

Tags : Rural Local Elections Kumari ,
× RELATED ஊரக உள்ளாட்சி தேர்தல் குமரியில் 474 பதவிகளுக்கு 1989 பேர் பேட்டி