×

ஊரக உள்ளாட்சி தேர்தல் குமரியில் 474 பதவிகளுக்கு 1989 பேர் பேட்டி

நாகர்கோவில், டிச.27:  குமரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 474 பதவிகளுக்கு 1989 பேர் போட்டியிடுகின்றனர். குமரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. முதல் கட்டத்தில் 476 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல்கட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகள் 6, பஞ்சாயத்து யூனியன் வார்டு பதவிகள் 61, ஊராட்சி தலைவர் பதவிகள் 48, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் 519 ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் மட்டும் 160 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். பறக்கை ஊராட்சி வார்டில் வேட்பாளர் மரணமடைந்த நிலையில் அந்த வார்டிலும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 756 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 42 ஆயிரத்து 35 பெண் வாக்காளர்களும், இதரர் 21 பேரும் என்று மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 812 பேர் முதல்கட்ட தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராஜாக்கமங்கலத்தில் 112 வாக்குசாவடிகளும், குருந்தன்கோட்டில் 82, தக்கலையில் 68, திருவட்டாரில் 100, மேல்புறத்தில் 114 வாக்குசாவடிகளும் என்று மொத்தம் 476 வாக்குசாவடிகள் தயார் படுத்தப்பட்டு உள்ளன. முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதிகள் 40 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ராஜாக்கமங்கலத்தில் 10, குருந்தன்கோட்டில் 6, தக்கலையில் 5, திருவட்டாரில் 10, மேல்புறத்தில் 9 மண்டலங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் மேல்புறம் ஒன்றியத்தில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 456 மின்னணு இயந்திரங்களும் 114 கட்டுப்பாட்டு கருவிகளும் பயன்படுத்தப்படுகிறது.

முதல்கட்டத்தில் கிராம ஊராட்சி வார்டுகளில் உறுப்பினர் பதவிக்கு ராஜாக்கமங்கலத்தில் 328, குருந்தன்கோட்டில் 214, தக்கலையில் 202, திருவட்டாரில் 299, மேல்புறத்தில் 346 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். இதனை போன்று கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ராஜாக்கமங்கலம் 55, குருந்தன்கோடு 49, தக்கலை 39, திருவட்டார் 39, மேல்புறம் 37 பேர் களத்தில் உள்ளனர். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ராஜாக்கமங்கலம் 64, குருந்தன்கோடு 50, தக்கலை 49, திருவட்டார் 55, மேல்புறம் 64 வேட்பாளர்கள் உள்ளனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ராஜாக்கமங்கலம் 8, குருந்தன்கோடு 5, தக்கலை 4, திருவட்டார் 4, மேல்புறம் 5 பேரும் உள்ளனர். அந்த வகையில் மொத்தம் முதல்கட்டத்தில் 1989 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
முதல்கட்ட வாக்குபதிவு நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான வாக்குசீட்டுகள் வாக்குப்பெட்டிகள், நேற்று மதியம் முதல் அந்தந்த வாக்குசாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இருந்து எடுத்து செல்லப்பட்டன. வாக்குசாவடியில் பணியில் ஈடுபடுகின்ற அலுவலர்களுக்கு வாக்குசாவடியில் பணியாற்றுவதற்கான பணி ஆணையும் வழங்கப்பட்டு அவர்கள் மாலையிலேயே வாக்குசாவடிகளில் பொறுப்பேற்றனர். வாக்குசாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

Tags : Rural Local Elections Kumari ,
× RELATED ஊரக உள்ளாட்சி தேர்தல் குமரியில் 15...