×

குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களால் விபத்து

செங்கல்பட்டு, டிச. 19: செங்கல்பட்டு நகராட்சியில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை இதுவரை மூடாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு பெரிய மணியகாரர் தெருவில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது.  அதனை சரி செய்வதற்காக தார் சாலையில் பெரிய பள்ளம்  தோண்டப்பட்டது. பணி முடித்து தோண்டப்பட்ட பள்ளத்தை நகராட்சி ஊழியர்கள் இதுவரை சரி செய்யவில்லை. இதனால், கடந்த மூன்று மாதங்களாக அந்த பகுதியில் வசிக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேலைகளுக்கு வாகனத்தில் சென்று வர முடியவில்லை. மேலும், இரவு நேரங்களில் டூ-வீலரில் செல்பவர்கள் பெரிய பள்ளத்தில் விழுவதால் காயம் ஏற்படுகிறது. அதேபோல் பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் இந்த சாலையை கடந்து செல்லும்போது பள்ளத்தில் விழுந்து செல்கின்றனர்.

சமீபத்தில் பெய்த மழையினால் சாலையில் தோண்டப்பட்ட  பள்ளத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. பள்ளம் இருப்பது தெரியாமல் குழந்தைகள், பெரியவர்கள் முதியவர்கள் பெண்கள் இதில் விழுந்து காயமடைந்தனர். பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் ரேஷன் கடை உள்ளதால் ரேஷன் பொருட்கள் வாங்க வருபவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இது சம்பந்தமாக நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடவில்லை.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்ய அவசரகதியில் நகராட்சி அதிகாரிகள் பள்ளம் தோண்டினார்கள். ஆனால், இதுவரை அந்த பள்ளத்தை மூடவில்லை. பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை சாலையோரங்களில் போட்டுள்ளதால் பாதசாரிகளும் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதேபோன்று நகராட்சியில்  குண்டூர், பரமேஸ்வரபுரம், ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய்கள் அமைக்க   தோண்டப்பட்ட பள்ளங்கள் இதுவரை மூடவில்லை. உடனடியாக இந்த சாலையில்  உள்ள பள்ளங்களை மூடி சரி செய்ய வேண்டும்” என்றனர்.

Tags : Accident ,road ,
× RELATED மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்