×

பார்வையாளர் வேண்டுகோள் தா.பழூர் கார்குடி கிராமத்தில் உள்ள சுத்தமல்லி நீர்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தா.பழூர், டிச.19: தா.பழூர் கார்குடி கிராமத்தில் உள்ள சித்தமல்லி நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீரினை மாவட்ட கலெக்டர் ரத்னா திறந்து வைத்து தெரிவித்ததாவது:சித்தமல்லி நீர்தேக்கமானது அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கார்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த நீர்தேக்கத்தின் கரையின் மொத்த நீளம் 5050 மீட்டர். இந்த அணையின் முழு கொள்ளளவு உயரம் 4.75 மீட்டர். மொத்த கொள்ளளவு 226.80 மில்லியன் கன அடி ஆகும்.
இதில் மூன்று தலைமதகுகள் உள்ளன. தலைமதகு எண்.1 மூலம் கார்குடி தெற்க்கேரிக்கும், தலைமதகு எண்.2 மூலம் கோவத்தடை ஏரிக்கும் மற்றும் மெயின் வாய்க்காலுக்கும், தலைமதகு எண்.3 மூலம் திருப்புரந்தான் பெரிய ஏரிக்கும் மற்றும் திருப்புந்தான் வாய்க்காலுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு பாசன வசதி பெறுகிறது.

சித்தமல்லி நீர்தேக்கத்தின் மூலம் நன்செய் நிலம் 1179.02 ஏக்கரும், புன்செய் நிலம் 3901.60 ஏக்கர் நிலமும் மொத்தம் 5080.62 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையின் மூலம் நடுவலூர் (கிழக்கு), இருகையூர், காரைக்குறிச்சி, தா.பழூர், கோடங்குடி, திருபுரந்தான், இடங்கண்ணி, சோழமாதேவி ஆகிய கிராமங்கள் பயன்பெறுகின்றன. நீர்தேக்கத்திலிருந்து உபரிநீரை வெளியேற்ற ஒரு உபரிநீர்ப்போக்கியும் மற்றும் ஒரு உபரிநீர் வழிந்தோடியும் உள்ளது. இந்த உபரிநீரானது சித்தமல்லி ஓடை வழியாக சென்று கொள்ளிடத்தில் கலக்கிறது. தற்போது நடப்பு வடகிழக்கு பருவமழையால் அணை முழு கொள்ளளவை எட்டியது. சித்தமல்லி நீர்தேக்கத்திலிருந்து நன்செய் மற்றும் புன்செய் ஆயக்கட்டு நிலங்களுக்கு 55 தினங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளர் வேட்டைசெல்லம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தட்சணாமூர்த்தி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை, உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, வேல்முருகன், மருதமுத்து, சதீஷ், ராஜாசிதம்பரம் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED உடையார்பாளையம் அரசு பெண்கள் பள்ளி 10ம்...