×

டேன்டீ தொழிலாளர்கள் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

பந்தலூர், டிச. 19: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ  சரகம் 4 பகுதியில் சாலை வசதி இல்லாததால், தொழிலாளர்கள் உள்ளாட்சி தேர்தலில்  வாக்களிப்பதில்லை என கூறி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை  தெரிவித்தனர். சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அரசு தேயிலைத்தோட்டம் சேரங்கோடு  டேன்டீ பத்து லைன் பகுதியில் 70க்கும் மேற்பட்ட டேன்டீ குடியிருப்புகளில்  தொழிலாளர்கள் கடந்த 40 ஆண்டுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இப்பகுதி  மக்கள் பயன்படுத்தி வரும் மண் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால்  தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவயல் முதல் பத்து லைன்  வரையுள்ள சுமார் 1,500 மீட்டர் தூரமுள்ள சாலையை சீரமைத்து தரவேண்டும் என  மக்கள் கோரிக்கை வைத்தும் எந்தவிதமான  நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இப்பகுதியில்  யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாலும், ஆட்டோ, 108 ஆம்புலன்ஸ்  உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்ல முடியாததாலும் நோயாளிகளை மருத்துவமனைக்கு  அழைத்து செல்ல முடியாத அவல நிலை உள்ளது. மேலும் கொளப்பள்ளி, அய்யன்கொல்லி  போன்ற பகுதிகளுக்கு சென்று அத்யாவசிய பொருட்கள் மற்றும் ரேஷன் பொருட்களை  வாங்கி தலை சுமையாக சுமந்து வருகின்றனர்.
எனவே தங்களை கண்டுகொள்ளாத அரசு  மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நேற்று அப்பகுதி மக்கள் வீடுகளில்  கருப்புக்கொடிகளை ஏற்றி உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் வாக்களிப்பதில்லை என  போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு சென்ற சேரம்பாடி போலீசார் மற்றும் எருமாடு வருவாய் ஆய்வாளர்  காமு, வி.ஏ.ஒ. செந்தில்குமார் ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தினர்.

Tags : Dandee ,boycott homes ,
× RELATED நாயக்கன்சோலை டேன்டீ பகுதிக்கு தார்...