×

தேக்கம்பட்டியில் நடைபெறும் புத்துணர்வு முகாமிற்கு மேலும் 2 யானைகள் வந்தன

மேட்டுப்பாளையம், டிச.19; கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் கரையோரம் தேக்கம்பட்டியில் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு நேற்று 2 கோயில் யானைகள் வந்தன. இதையடுத்து முகாமில் பங்கேற்ற யானைகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கான 12 வது சிறப்பு நலவாழ்வு புத்துணர்வு முகாம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 15ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது .இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயில் மற்றும் மடங்களை சேர்ந்த  26 யானைகள் கலந்து கொண்டன. கடந்த 2003ம் ஆண்டு முதன்முதலாக கோயில் மற்றும் மடங்களைச் சேர்ந்த யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் துவங்கியது. மலைப்பாதை போக்குவரத்தும் மலைப்பகுதியில் நிலவும் தட்பவெட்ப நிலை காரணமாக யானைகள் சிரமப்படும் என்பதால் புத்துணர்வு முகமானது கடந்த 2012ம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தில் பவானி ஆற்றின் கரையோரம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 12வது புத்துணர்வு முகாம் 15ம் தேதி துவங்கி 48 நாட்கள் நடைபெற உள்ளது.

தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் ஊட்டச்சத்து உணவுகளும், முழு ஓய்வும்  அளிக்கப்படுவதால் யானைகள் இயற்கையான சூழ்நிலையில் சேற்றில் உருண்டும் மண்ணெடுத்து மேலே போட்டுக்கொண்டும் உற்சாகத்துடன் பொழுதை கழித்து வருகின்றன. சாலை அனுமதி கிடைக்காத காரணத்தால் கடந்த 15ம் தேதி புதுச்சேரி திருநள்ளாறு கோயில் யானை பிருக்ருதி மற்றும் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி ஆகிய 2 யானைகளும் வரவில்லை. இந்த நிலையில் அந்த யானைகள் நேற்று காலை தேக்கம்பட்டிக்கு வந்து சேர்ந்தன. யானைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் பழங்கள் கொடுத்து வரவேற்றார். முகாமில் உள்ள யானைகளை பார்த்த உடன் புதிய வரவான 2 யானைகளும் மகிழ்ச்சி அடைந்தன.

Tags : Thekkampatti ,refreshment camp ,
× RELATED தேனி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட...