×

கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முற்றுகை

கோவை, டிச. 18:  கோவையில் கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.கோவை திருச்சி ரோடு ராமநாதபுரத்தில் உள்ள கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை, பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், தேர்தலை காரணம் காட்டி நலவாரிய பணிகளை முடக்கக்கூடாது என கோஷம் எழுப்பினர். இதன்பின்னர், தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையாளரிடம் மனு அளித்தனர். இது பற்றி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாநில துணை பொதுச்செயலாளர் செல்வராஜ் கூறியதாவது: தேர்தலை காரணம் காட்டி தொழிலாளர் நலவாரிய பணிகளை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தேர்தலுக்கும் நலவாரியத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. எனவே, தேர்தலை காரணம் காட்டி நலவாரிய பணிகளை முடக்கக்கூடாது. கோவை நலவாரிய அலுவலகத்திற்கு நிரந்தரமான தொழிலாளர் உதவி ஆணையர் இல்லை. இதனால் தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே, நிரந்தரமாக ஒரு அலுவலரை நியமிக்க வேண்டும். நலவாரிய திட்டங்களை தொழிலாளர்களிடம் எடுத்துச்செல்வதில் தொழிற்சங்க தலைவர்கள் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். ஆனால், தொழிலாளர் நல அலுவலகத்தில் தொழிற்சங்க தலைவர்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை. இந்த போக்கை அதிகாரிகள் மாற்றிக்கொள்ள வேண்டும். தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 5ம் தேதிக்குள் ஓய்வூதியம் கிடைக்க வகை செய்ய வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கவேண்டும். இதில் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு செல்வராஜ் கூறினார். இந்த முற்றுகை போராட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள் என்.செல்வராஜ், ஆர்.பாலகிருஷ்ணன், சிரஞ்சீவி கண்ணன், வி.ஆர்.ஆறுச்சாமி, மனோகரன், பெருமாள், எம்.பழனிசாமி, சித்ரா, கிருஷ்ணசாமி, ஆர்.வேலுசாமி, பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Siege ,office ,Construction Labor Board ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...