×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு அம்மாபட்டினத்தில் பெய்த கன மழையால் சேறும் சகதியுமாக மாறிய சுனாமி நகர் சாலை

மணமேல்குடி, டிச.18: அம்மாபட்டினத்தில் பெய்த தொடர் கனமழையால் சுனாமி நகருக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். எனவே இந்த சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அம்மாபட்டினம் கிளை வலியுறுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கிளை தலைவர் முஹம்மது இக்பால் தலைமை தாங்கினார். துணை தலைவர் அபுதாஹிர், செயலாளர் பைரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் வருமாறு:அம்மாபட்டினத்தில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் வடக்கு தெருவிலிருந்து கிழக்கே கடலோர பகுதியில் சுனாமி நகர் உள்ளது. இந்த சுனாமி நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சுனாமி நகரில் அங்கன்வாடி மையமும் செயல்படுகிறது. இந்த சுனாமி நகர் கடலோரத்தில் இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு வந்து செல்லவும், கடலோரத்தில் தங்குவதற்கும் இந்த சுனாமி நகருக்கு வந்து செல்கின்றனர். வடக்கு தெருவில் இருந்து சுனாமி நகருக்கு செல்லும் சாலை மண் சாலையாகவே காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையிலேயே இருக்கிறது. இதனால் கடலுக்கு செல்லக்கூடிய மீனவர்களும், அங்கன்வாடி மற்றும் பள்ளிக்கூடத்திற்கு செல்ல கூடிய மாணவ, மாணவிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இதன் வழியாக நடந்து செல்லும் முதியவர்களும், பெரியவர்களும் சேற்றில் கால்கள் சிக்கி கொண்டும், சேற்றில் வழுக்கியும் கீழே விழுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்தப் பகுதியில் தார்சாலை அமைத்து தர வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டினம் கிளை கோரிக்கை விடுக்கிறது. மேலும் இது சம்பந்தமாக மணமேல்குடி அலுவலகத்தில் இரண்டு முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க இதன்மூலம் கேட்டுக்கொள்கிறோம். தற்போது அம்மாபட்டினம் பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் டெங்கு, மலேரியா, டைபாய்டு மற்றும் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு மற்றும் புகை மருந்து அடிக்க சம்பந்தப்பட்ட துறையை கேட்டுக்கொள்வது, மேலும் அம்மாபட்டினத்தில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வலியுறுத்துவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : tsunami city road ,Ammapattinam ,
× RELATED அரசின் திட்டங்களை நன்கு பயன்படுத்தி...