×

கல்லிடைக்குறிச்சி அருகே அரைகுறையில் நிற்கும் சாலைப் பணி

அம்பை, டிச. 18: கல்லிடைக்குறிச்சி அருகே அரைகுறையில் நிற்கும் சாலைப் பணியால்  பெரியார் சமத்துவபுரம் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
சேரன்மகாதேவி ஒன்றியம், கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் சமத்துவபுரத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பராமரிப்பின்றி பாழான வீதிகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தனர். இதையடுத்து இப்பகுதியில் புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.  இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கல்லிடைக்குறிச்சி- மணிமுத்தாறு சாலையை இணைக்கும் வகையில் உள்ள 8 வீதிகளில் ஏற்கனவே சேதமடைந்த நிலையில் இருந்து பழைய சாலைகளை பெயர்த்து எடுத்தனர். ஆனால், அதன்பிறகு எந்தப் பணியும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுசென்றனர். இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வீட்டிலிருந்து நடந்தபடிமெயின் ரோடு வந்து பஸ் ஏறி வெளியூர் செல்ல வரமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இங்கு என்னைப்போன்ற முதியவர்கள் மற்றும் இங்குள்ள கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்டோரை அவசர மருத்துவ உதவிக்கு அழைத்துச்செல்ல வாகனங்களை அழைத்தால் ஆட்டோ ஓட்டுநர்கள் கூட வர மறுக்கும் அவலம் தொடர்கிறது. குறிப்பாக சாலைகளை பெயர்த்து போடப்பட்ட ஜல்லி கற்கள் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களை பதம் பார்த்து விடுவதால் வாகனங்கள் பழுதடைந்து விடுவதால் மாணவர்கள் பள்ளி கல்லூரி செல்ல முடியாது விபத்திற்கு உள்ளாகும் அவலம் இருந்தது.
இதுகுறித்து தினகரனில் கடந்த ஜூன் மாதம் படத்துடன் வெளியானது. இதையடுத்து இங்கு வந்து பார்வையிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், எங்கள் நிலையை விளக்கிக் கூறினோம். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சாலை அமைப்புக்காக சாலைகளின் குறுக்கே ஆங்காங்கே ஜல்லியை தாக்கு கட்டி போட்டு விட்டு சென்று விட்டனர். சின்னாபின்னமாக கிளரிபோடப்பட்ட சாலையில் இதுவரை கஷ்டப்பட்டு நடந்து சென்று வந்தோம். தற்போது ஆங்காங்கே குறுக்கே ஜல்லியை கொட்டி வைத்து விட்டு சென்று விட்டனர். இதனால் சாலையில் நடந்து கூட செல்ல முடியாது சிரமப்பட்டு வருகிறோம்’’ என்றார். எனவே, மாதக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை அமைப்பு பணியை விரைந்து முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்பு கிராம மக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

Tags : road work ,Kalidaikurichi ,
× RELATED காரோடு- கன்னியாகுமரி இடையே 4 வழிச்சாலை பணி 2025 செப்டம்பரில் முடியும்