×

காரோடு- கன்னியாகுமரி இடையே 4 வழிச்சாலை பணி 2025 செப்டம்பரில் முடியும்

*இதுவரை 56 சதவீத பணிகள் நிறைவு

நாகர்கோவில் : காரோடு- கன்னியாகுமரி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் 2025 செப்டம்பரில் முடிவடையும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். குமரி மாவட்டத்தில் காரோடு முதல் வில்லுக்குறி வரை 27 கி.மீட்டர் தூரம், வில்லுக்குறி முதல் நாகர்கோவில் அப்டா சந்தை வரை 14 கி.மீ. தூரம், அப்டா சந்தை முதல் காவல்கிணறு பெருங்குடி வரை 16 கி.மீ. தூரம், அப்டா சந்தை முதல் முருகன்குன்றம் வரையிலும் 12 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலைக்கு திட்டமிடப்பட்டது.

இதில் அப்டா சந்தை முதல் காவல்கிணறு பெருங்குடி வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்து, தற்போது வாகன பயன்பாடு உள்ளது. இது தவிர இன்னும் சுமார் 53 கி.மீ. தூரத்துக்கு நான்கு வழிச்சாலைகள் பணிகள் தொடங்கி பாதியில் நிற்கிறது. பல்வேறு காரணங்களால் பணிகள் தடைபட்டன. இந்நிலையில், பணிகளை மேற்கொண்ட எல்அண்ட் டி நிறுவனம் பணிகள் நடைபெறாமல் நஷ்டம் காரணமாக தனது ஒப்பந்தத்தை ரத்துசெய்தது. இதனால், நான்கு வழிச்சாலை திட்டம் பாதியில் நின்றது.

இந்நிலையில், இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் அரசியல் கட்சிகள் மீண்டும் குரல் கொடுத்தன. இதையடுத்து கடந்த மே மாதம் ₹1041 கோடியே 30 லட்சத்திற்கு மறு டெண்டர் விடப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் 12.5.2023 அன்று கையெழுத்தானது. இதனை இரு நிறுவனங்கள் இணைந்து எடுத்துள்ளன.

இரு ஆண்டுகளில் பணிகளை முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கான்கிரீட் சாலைகள் அமைக்க தேவையான ராட்சத இயந்திரங்கள் குமரிக்கு கொண்டு வரப்பட்டன. வெளி மாவட்டங்களில் இருந்து தேவையான மண் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. களியக்காவிளை – கன்னியாகுமரி இடையே ஆங்காங்கே இன்னும் 24 கி.மீ. தூரத்துக்கு பணிகள் பாக்கி உள்ளது. 35 குளங்கள் உள்பட சிறிய மற்றும் பெரியது என 60 பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில் குமரி மாவட்டம் வழியாக 10 டயர்களுக்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் செல்ல கூடாது என்ற தடை இருந்தது. இதையடுத்து மண் மற்றும் தளவாட பொருட்கள் கொண்டு வருவதில் சிக்கல் எழுந்தது. இது தொடர்பாக கூடுதல் தலைமை செயலாளர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நான்கு வழிச்சாலைக்காக 16 டயர்கள் கொண்ட வாகனங்களிலும் தளவாட பொருட்கள் கொண்டு வர அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த பணிகளின் ஒரு கட்டமாக, கன்னியாகுமரி – களியக்காவிளை சாலையில், கணியாகுளம் – புத்தேரி இடையே பணிகள் நடக்கின்றன. இங்குள்ள குளத்தில் பாலம் அமைக்கப்பட உள்ளது.

இதையடுத்து தற்போது இந்த இடைப்பட்ட பகுதியில் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு பலகை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெறும் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கிறது.இது குறித்து நகாய் அதிகாரிகள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் 56.36 சதவீதம் நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்துள்ளன. அதாவது 30.274 கி.மீ. பணிகள் முடிந்துள்ளன. இவை தொடர்ச்சியாக இல்லாமல் சிறிது, சிறிதாக முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 24.05 கி.மீ. பணிகள் பாக்கி உள்ளது. இந்த பணிகளை முடிப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. 2025 செப்டம்பரில் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர் நிலைகள் மேல் பாலங்கள் அமைக்கப்பட உள்ளதால், பணிகள் பாதுகாப்பான முறையில் தான் மேற்கொள்ளப்படும் என்றனர். குமரி மாவட்டத்தில் அமைக்கப்படும் தங்க நாற்கர சாலை எகஸ்பிரஸ் வே ஆகும். இதன் படி 3 முதல் 5 மீட்டர் தரை மட்டத்திலிருந்து உயர்த்தி அதன் பின் முக்கால் அடி கனத்தில் கான்கிரீட் சாலையாக போடப்படுகிறது.

ரயில்வே மேம்பாலங்களில் கான்கிரீட் அடித்தளம் கொண்ட இரும்பு பாலங்களாக அமைகிறது. மெட்ரோபாலிட்டன் நகரங்களான டெல்லி, மும்பையில் எக்ஸ்பிரஸ் வே சாலை இருந்தாலும் சென்னையில் இச்சாலை இல்லை. தமிழகத்தில் முதன்முறையாக குமரியில் ‘எக்ஸ்பிரஸ் வே’ சாலை அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post காரோடு- கன்னியாகுமரி இடையே 4 வழிச்சாலை பணி 2025 செப்டம்பரில் முடியும் appeared first on Dinakaran.

Tags : Karod ,Kanyakumari ,Nagercoil ,Karod-Kanyakumari ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி – நாகர்கோவில் சாலையில்...