×

தேவாலா பகுதியில் இயங்கி வரும் தார் கலவை இயந்திரத்தை அகற்ற எதிர்ப்பு

ஊட்டி, டிச.17: கூடலூர் அருகேயுள்ள தேவாலா பகுதியில் அமைந்துள்ள தார் கலவை இயந்திரத்தை அகற்றக்கூடாது என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேவாலா அருகே அத்திகுன்னா செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தார் கலவை இயந்திரம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த இயந்திரம் கடந்த 16 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தேவாலா மற்றும் கூடலூர் பகுதிகளை சேர்ந்த கான்ட்ரக்டர்கள் சாலைகளை சீரமைக்க இங்கிருந்தே தார் கலவை தயாரித்து ெகாண்டுச் சென்று சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இந்நிலையில், இந்த தார் கலவை இயந்திரம் அருகே வசிக்கும் சிலர், இந்த தார் கலவை இயந்திரத்தால் பாதிப்பு எனக் கூறி, அதனை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தார் கலவை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், தேவாலா மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள், இந்த இயந்திரத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை எனக் கூறி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க நேற்று வந்தனர். சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மனுக்களுடன் வந்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்தனர்.

பின், எஸ்பி., சசிமோகன் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை சந்தித்து மனுக்களை அளித்தனர். மேலும், தொடர்ந்து இந்த தார் கலவை இயந்திரம் (பிளான்ட்) இயங்க பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.  தார் கலவை இயந்திரத்தை அகற்றக்கூடாது, தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 200க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுலவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது, தேவாலா பகுதியில் தார் கலவை இயந்திரம் ஒன்று உள்ளது. இந்த இயந்திரத்தால், சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அதேபோல், இந்த தார் கலவை இயந்திரம் மூலம் இப்பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் உடனுக்குடன் நடந்து வருகிறது. மேலும், பலர் இதன் மூலம் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். எனவே, இதனை மூடக் கூடாது. சிலர் தொழில் ரீதியான போட்டியில், இந்த பிளான்டை மூடுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, அரசு அவர்களுக்கு துணை போகக் கூடாது, என்றனர்.

Tags : removal ,area ,Dewala ,
× RELATED பந்தலூர் அருகே கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு