×

அணுமின்நிலைய குடியிருப்பு நுழைவாயலை பயன்படுத்த தடை பிரதான சாலைகளை மூடி மக்கள் முற்றுகை

திருக்கழுக்குன்றம், டிச.17: கல்பாக்கத்தில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலைகளில் கேட் அமைத்து, அவர்களுக்கு தடைவிதித்ததால், ஆத்திரமடைந்து பிரதான சாலைகளை மூடி முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், அதிவேக ஈணுலை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் இயங்குகின்றன. இந்தப் பிரிவுகளில் பணிபுரியும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்புகளில் வசிக்கின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில், அரசு போக்குவரத்து துறை, கல்பாக்கம் காவல் நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி, வங்கிகள் உள்ளன. மேலும் சதுரங்கப்பட்டினம் காவல் நிலையம், சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனை ஆகியவைகளுக்கு இந்த குடியிருப்பு வழியாகவே பொதுமக்கள் சென்று வருகின்றனர். சமீபத்தில் அணுமின் நிலைய நிர்வாகம் சார்பில், இந்த குடியிருப்பு பகுதியில் பல்வேறு இடங்களில் கேட் அமைக்கப்பட்டது. அதற்கு பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்திய சாலைகளில் கேட் அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அணுமின் நிலைய நிர்வாகம் சார்பில், குடியிருப்பு பகுதியின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில்களை  மூடினர். நேற்று காலை அவ்வழியாக சென்ற மக்கள், இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை அணுமின் நிலையம் செல்லும் சதுரங்கப்பட்டினம் சாலையில் உள்ள நுழைவாயில் கேட், புதுப்பட்டினம் பஜார் வீதியில் உள்ள நுழைவாயில் கேட் ஆகியவற்றை மூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அணுமின் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் அணுமின் நிலையம் செல்ல முடியாமலும், கல்பாக்கம் பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமலும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமலும் தவித்தனர். அங்கு பரபரப்பு நிலவியது. தகவலறிந்து செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம், மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம், செய்யூர் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, திருப்போரூர் எம்எல்ஏ எல்.இதயவர்மன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் தங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, அணுமின் நிலைய நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஒரு சில நிபந்தனைகளுடன், நேரம் கால அட்டவணைப்படியும் மூடிய  நுழைவாயில்களை திறந்து விடுவதாக அணுமின் நிலைய நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. பின்னர், பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நேற்று காலை முதல் மாலை வரை அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் எங்கள் பகுதியில் இதுபோன்று அணுமின் நிலையம் அமைந்தது. அப்போது, சுற்றுப்புற கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும். வாழ்வாதாரம் வளர்ச்சி அடையும் என நிர்வாகம் தரப்பில் பொய்யான வாக்குறுதிகளை கூறி, இந்த அணு மின் நிலையத்தை அமைத்தனர். இதற்காக எங்கள் நிலங்களையும் கொடுத்தோம். ஆனால் அணுமின் நிலையத்தில் சுற்றுப்புற கிராம மக்களுக்கு  வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு, வெளி மாநிலத்தவர்களுக்கு கொடுத்தனர். அணுமின் நிலையத்தின் அணுக் கசிவால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். வேலை மட்டும் வெளி மாநிலத்தவர்களுக்கு என்ற பாணியில் நிர்வாகம் செயல்படுகிறது.
மேலும், பல ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்திய சாலைகளில் கேட்டுகளை அமைத்து, எங்களை இந்த நிர்வாகம் வஞ்சிக்கிறது. மனோகரன் என்ற அணுமின் நிலைய அதிகாரி  இங்கேயே பல ஆண்டுகளாக பணிபுரிந்து கொண்டு, புதிதாக வரும் அதிகாரிகளுக்கு   தேவையில்லாத ஆலோசனைகளை கூறி,  மக்களுக்கு எதிரான தொந்தரவு செய்கிறார். இனி வரும்காலங்களில் இதுபோல் நுழைவாயில்களை மூடினால், சுற்றுப்புற கிராம மக்களை ஒன்றிணைத்து  பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Tags : roadways ,power station ,
× RELATED ₹1270 கோடியில் மாமல்லபுரம் – புதுச்சேரி...