×

கடலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கடலூர், டிச. 17: கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பணியாற்றியதற்கு உரிய மதிப்பூதியம் வழங்கப்படாததை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.  கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 50 சதவீதத்தை மதிப்பூதியமாக வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டிருந்தது. கடலூர் மாவட்டம் தவிர்த்து பிற மாவட்டங்களில் இந்த உத்தரவு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், உதவியாளர்களுக்கும் சராசரியாக ரூ.17 ஆயிரம் மதிப்பூதியமாக வழங்கப்பட்டது. ஆனால், கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றிய 600 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் 750 கிராம உதவியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் மட்டுமே மதிப்பூதியமாக வழங்கப்பட்டது. இது கடலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மதிப்பூதிய பணம் ரூ. ஒரு கோடி எங்கே என அவர்கள் கேள்வி எழுப்பினர்.  அரசாணையின் படி அதனை தங்களுக்கு வழங்க வேண்டும் எனக்கோரி ஏற்கனவே இரண்டு கட்டப் போராட்டங்களை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கடலூர் மாவட்டத்தில் நடத்தினர். மேலும் தங்கள் பிரச்சனை தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தனர்.

ஆனால் இதுவரை தங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் தங்கள் கண்டனத்தை பதிவு செய்யும் விதமாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், முஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், புவனகிரி ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை 30 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டத் தலைவர்  ரவி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலர் சுரேஷ்,  வட்டச்செயலர் ஜெயராம் மூர்த்தி, பொருளாளர் ராம் உள்பட பலர் உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். உள்ளிருப்பு போராட்டத்திற்கு முன்னிலை வகித்த மண்டல செயலர் ஜெயராமன் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்டாலும் பொதுமக்கள், விவசாயிகள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்  அனைவருக்கும் உரிய சான்றிதழ்களை வழங்கிக்கொண்டு அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் நேரிடாத வகையில் அறவழியில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துகிறோம். எங்கள் கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்றால் விரைவில் வடக்கு மண்டல அளவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார்.

சிதம்பரம்: சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விஏஓக்கள்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்  சங்கத்தின் சிதம்பரம் வட்ட கிளை சார்பில் நடந்த இந்த போராட்டத்திற்கு வட்ட  செயலாளர் அன்பரசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் லட்சுமணன், பாலமுருகன்,  பாவாடைசாமி, செந்தில் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர். திட்டக்குடி: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட பொருளாளர் செல்வம், வட்டத் தலைவர் ரவிக்குமார், வட்ட செயலாளர் சதீஷ், வட்ட பொருளாளர் ராசு, அன்புராஜ், ரமேஷ், கல்பனா, பரமேஸ்வரி உட்பட 42 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Village Cadre Officers ,Cuddalore District ,
× RELATED சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில்...