×

தொழில் நெருக்கடியால் காலியாகும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள்

திருப்பூர், டிச.16:திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில்கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பின்னலாடை உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் புற்றீசல் போல் துவங்கப்பட்டது. நூற்பாலைகளைத் தொடர்ந்து கைத்தறி, விசைத்தறி, நிட்டிங், டையிங், பிளிச்சிங், பிரிண்டிங் ஆகியவற்றைத்தொடர்ந்து ஆடை தயாரிப்பான ஓவர் லாக், பேட்லாக், சிங்கர், அயனிங், பேக்கிங் ஆகிய தொழில்நிறுவனங்கள் துவங்கப்பட்டது. பருத்தி, பாலிஸ்டர் துணிகளுக்கு பல்வேறு வண்ணங்களில் சாயமிட்டு பொது மக்களுக்கு விரும்பும் வகையில் ஆடைகள் தயாரிக்கப்பட்டது. இது உலகநாடுகளிலேயே நல்லவேற்பு கிடைத்தது. 2014ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளிலிருந்து ஆர்டர்கள் வரத்துவங்கியது. தமிழக தொழிலாளர்கள் பற்றாக்குறையால் வடமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூர் வந்தனர்.  

2016 பணம் மதிப்பிழப்பு, 2017 ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் வாடகை கட்டடங்களில் இயங்கி வந்த ஆயிரக்கணக்கான சிறு, குறு ஜாப்-ஆர்டர் நிறுவனங்களுக்கு போதிய லாபம் இல்லாததால் இழுத்து மூடினர். லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோனது. பொருளாதாரத்தில் முன்னேறிய தொழில் முனைவோர்கள் சொந்த கட்டடங்களுக்கும், நவீன இயந்தரங்களை இறக்குமதி செய்து குறைந்த ஆட்களைக்கொண்டு அதிக உற்பத்தியின் மூலம் தொடர்ந்து தங்களுடைய ஆர்டர்களை தக்க வைத்துக்கொண்டனர். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.26 ஆயிரம் கோடி என்பது தற்போது ரூ.24 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. உள்நாட்டு வியாபாரம் ரூ.18 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது ரூ.14 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. தொழில் நெருக்கடியால் கடந்த ஐந்து - ஆறு மாதங்களாக இங்கு நகரில் ஆள் நடமாட்டமே இல்லை. சாலைகள் முதல் மக்கள் முகங்கள் வரை பொருளாதார சரிவின் வாட்டம் தெரிகிறது. ‘வேலைக்கு ஆட்கள் தேவை’ என்று எழுதப்பட்ட பதாகைகளால் நிரம்பியிருந்த ஊரில், தொழில் நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டதால், ‘கட்டடம் வாடகைக்கு விடப்படும்’ என்ற பதாகைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. திருப்பூர் நகரின் தற்போதைய நிலை தொழிலாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து  ஏற்றுமதி நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூறியதாவது:சீனா, வங்கதேசம் போன்ற பின்னலாடை உற்பத்தி செய்யும் நாடுகளில் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் உற்பத்தி செய்யப்படும் வகையிலேயே பெரும்பாலான நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், திருப்பூரில் நிலைமை அப்படியல்ல. துணிக்கு சாயமிடப்படுவது ஓர் இடத்தில் நடக்கும், துணிகளில் அச்சிடப்படுவது ஓர் இடத்தில் நடக்கும், பட்டன் வைப்பது முதல் லேபிள் ஓட்டுவது வரை நிறுவனத்தில் அல்லாமல் ‘ஜாப் வொர்க் யூனிட்’ எனப்படும், நிறுவனத்துக்கு வெளியில் அமைத்துள்ள சிறு தொழில் கூடங்களில் நடக்கும். இந்த சிறு நிறுவனங்கள் பெரும்பாலும் பணத்தை ரொக்கமாகவே புழங்கி வந்தன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் இவை அனைத்தும் நிலைகுலைந்தன. அடுத்த சில வாரங்களுக்கு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவே முடியாத நிலை இருந்தது.பின்னர் ஜி.எஸ்.டி வரி விகிதம், அதில் அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், கூடுதலாக செலுத்திய வரியைத் திரும்பப் பெறுவதில் உண்டான தாமதம், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தம் உள்ளிட்ட சிக்கல்கள் அடுத்த அடியாக விழுந்தன. பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கி வந்த சலுகைகள் மீண்டும் வழங்க வேண்டும். ஏற்றுமதி நிறுவனங்கள் செலுத்திய உள்ளீட்டு வரியினங்களை காலதாமதம் இன்றி விரைவாக வழங்க வேண்டும். ஒரு சில நாடுகளுடன்  வரியில்லா ஒப்பந்தங்களை ஏற்படுத்தினால் மட்டுமே  பின்னலாடை தொழில் முனைவோர்களுக்கு எதிர்காலம் உண்டு. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Job Workers ,Industry Crisis ,
× RELATED பொருளாதார மந்த நிலையால் விபரீதம்...