×

ஈரோட்டுக்கு எகிப்து, துருக்கி வெங்காயம் 5.2டன் வரத்து

ஈரோடு, டிச. 16:   நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது.  ஈரோடு மாவட்டத்தில் வெங்காயம் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், மக்கள் தினமும் சமையலில் வெங்காயத்தினை சேர்க்க முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டுக்கு துருக்கி, எகிப்து நாடுகளில் இருந்து வெங்காயம் வரத்தானது. இந்த வெங்காயத்தினை வியாபாரிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.  இது குறித்து வெங்காய வியாபாரி கூறியதாவது: ஈரோடு மார்க்கெட்டுக்கு புனே, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயமும், ஈரோடு மாவட்டம் தாளவாடி, ஆசனூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் வரத்தாகும். நாள் ஒன்றுக்கு 300 டன் அளவுக்கு வெங்காயம் வரத்தாகும்.

வெங்காயம் தட்டுப்பாடு காரணமாக 25டன் மட்டுமே வரத்து இருந்தது. இதனால் ஒரு கிலோ ரூ.200க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு வரத்து அதிகரித்து படிப்படியாக குறைந்து தற்போது பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.100க்கும், சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.80க்கும் விற்கப்படுகிறது.  தற்போது துருக்கி, எகிப்து போன்ற நாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5ஆயிரத்து 200 கிலோ வெங்காயம் ஈரோட்டிற்கு வரத்தானது. இந்த ரக வெங்காயம் ஒரு கிலோ ரூ.110க்கு விற்கப்படுகிறது. அதேபோல் கர்நாடகா வெங்காயம் ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Egypt ,Turkey ,
× RELATED துருக்கியில் கேளிக்கை விடுதியில்...