×

போதிய கால அவகாசம் இல்லாததால் சான்றிதழ்கள் பெற முடியாமல் வேட்பாளர்கள் தவிப்பு

சிவகங்கை, டிச. 13:  உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கும், மனுத்தாக்கலுக்கும் போதிய கால அவகாசம் வழங்கப்படாததால் சாதிச்சான்று உள்ளிட்ட பல்வேறு சான்று பெற முடியாமல் வேட்பாளர்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் டிச. 27 மற்றும் டிச. 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த டிச. 9ம் தேதி தொடங்கியது. கடந்த டிச. 7ம் தேதி சனிக்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. டிச. 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். டிச.14 மற்றும் டிச.15ஆகிய இரண்டு நாட்கள் அரசு விடுமுறை நாள். இந்த நாட்களிலும் மனு பெறப்படாது.

மனு தாக்கல் செய்ய டிச.16ம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் ரேசன் கார்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதற்கான ஆதாரம், உள்ளிட்ட சில ஆவணங்களை கட்டாயம் இணைக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி தனித்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மேற்கண்ட ஆவணங்களுடன் கட்டாயம் சாதி சான்றிதழ் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு இல்லா சான்று, கடன் இல்லா சான்று உள்ளிட்டவைகளையும் இணைக்க வேண்டும் என சில அலுவலர்கள் தெரிவித்துள்ளதாவல் அதற்காகவும் வேட்பாளர்கள் அலைகின்றனர். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கும், வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கும் இடையில் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளி இல்லாமல் உடனடியாக மனுத்தாக்கல் தொடங்கியதால் இந்த காலக்கெடுவுக்குள் சான்றிதழ்கள் பெறுவதில் வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வழக்கு இல்லா சான்று குறித்து தெளிவான உத்தரவுகள் போலீசாருக்கு இன்னும வழங்கப்படவில்லை. கூட்டுறவு சங்கங்களில் கடன் இல்லா சான்று பெறுவதிலும் குழப்பம் உள்ளது. சாதிச்சான்றிதழ் பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னர் கால தாமதமாகவே வழங்கப்படும் என்பதால் வேட்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, ‘உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பிற்கும், வேட்பு மனுத்தாக்கலுக்கான தொடக்க நாளுக்கும் இடையில் ஒரு நாள் மட்டுமே இடைவெளி இருந்தது. அந்த நாளும் அரசு விடுமுறை நாள். மேலும் என்னென்ன ஆவணங்கள், சான்றிதழ் இணைக்க வேண்டும் என்பதிலும் தெளிவான அறிவிப்புகள் இல்லை. வேட்பு மனுவை மட்டும் பெற்று கொண்டு சான்றிதழ்கள் பெற கூடுதல் அவகாசம வழங்க வேண்டும். விண்ணப்பித்திருக்கும் சான்றுகளை உடனடியாக வழங்க அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்’ என்றனர்.

இதுகுறித்து தேர்தல் அலுவலர் ஒருவர் கூறியதாவது,  ‘தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சான்றிதழ் விரைந்து வழங்கும்படி வருவாய்த்துறையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து தாசில்தார்களிடம் இதுகுறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தாமதம் செய்வதாக ஏதேனும் புகார் இருந்தால் தெரிவிக்கலாம்’ என்றார்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...