×

கேத்தி பாலாடா பகுதியில் நூலகத்தில் மழைநீர் புகுந்து புத்தகங்கள் சேதம்

ஊட்டி, டிச.13:  கேத்தி பாலாடா பகுதியில் அண்மையில் பெய்த மழை காரணமாக ஊர்ப்புற நூலகத்திற்குள் மழைநீர் புகுந்து ஏராளமான புத்தங்கள் சேதமடைந்தன. ஊட்டி அருகேயுள்ள கேத்தி பாலாடா பகுதியில் ஊர்ப்புற நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் சுமார் 15 ஆயிரம் நூல்கள் உள்ளன. மேலும், 90 மாத இதழ், 15 வார இதழ் மற்றும் நாளிதழ் வாசகர்களுக்காக வரவழைக்கப்படுகிறது. இதில் 1200க்கும் மேற்பட்ட வாசகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.கிளை நூலகமாக மாற்ற சொந்த கட்டிடம் இல்லாத நிலையில் கடந்த 23 ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள ஒரு அரசு உதவிப்பெறும் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் செயல்பட்டு வருகிறது. போதிய இட வசதிகள் இல்லாததால் பல நூல்களை அடுக்கி வைக்க முடியாமல் பயனின்றி மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டுள்ளது. நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டி தர வேண்டும் என பலரும் வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இம்மாத துவக்கத்தில் நீலகிரியில் பெய்த பருவமழை காரணமாக கேத்தி சுற்று வட்டார பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. இந்த நூலகத்திற்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் நீரில் நனைந்து சேதமாயின.

மேலும், மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களும் சேதமடைந்துள்ளன. இதனால் புத்தகங்களுக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இருப்பினும் அவற்றை உலரவைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து நூலக வாசகர் ஹரிஹரன் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கிராமப்புற நூலகங்கள் பயன்படுத்தி வருகின்றனர். நூலக பராமரிப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கேத்தி பாலாடா உட்பட பல பகுதிகளிலும் உள்ள நூலகங்களின் பராமரிப்பு மிக மோசமான நிலையில் உள்ளன. இவற்றை சீரமைத்து நூல்களை நல்ல முறையில் பாதுகாத்து அனைவரும் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Tags : area library ,Kathy Palata ,
× RELATED குன்னூர் கேத்தி பாலாடாவில் நடைபாதை...