×

கோவில்பட்டி ஓடை ஆக்கிரமிப்பு பகுதியில் மின் இணைப்பை துண்டிக்க கோரிக்கை

கோவில்பட்டி, டிச. 13: கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடையில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை கடந்த 2010ம்  ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட வருவாய் துறை மற்றும் நகராட்சி  நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததை கண்டித்து  பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து நீர்வரத்து ஓடையில் உள்ள  அனைத்து கட்டிடங்களுக்கு உரிய வரிவிதிப்புகளையும் நகராட்சி நிர்வாகம் ரத்து  செய்தது. இதேபோல் ஆக்கிரமிப்பு கட்டிகளுக்கான மின்இணைப்பையும்  மின்வாரியம் மூலம் துண்டிப்பு செய்யப்பட்டன. இந்நிலையில்  ஆக்கிரமிப்பாளர்கள் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தீபாவளி வரை  தங்களுக்கு அனுமதி வேண்டும் என முறையீடு செய்ததன்பேரில், நீதிமன்றமும்  அனுமதியை வழங்கியது. ஆனால் தீபாவளி முடிந்த பின்னர், நீர்வரத்து  ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு மீண்டும் மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு மீண்டும்  மின்இணைப்பு வழங்கிய மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை  கண்டித்தல். இவ்வாறு வழங்கப்பட்ட மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  நீர்வரத்து ஓடை மீட்பு குழுவினர் ஐந்தாவது தூண் அமைப்பு நிறுவனர்  சங்கரலிங்கம் தலைமையில் கோவில்பட்டி ஆர்டிஓ விஜயாவிடம் கோரிக்கை மனு  அளித்தனர்.  இதில் நீர்வரத்து ஓடை மீட்பு குழு செயலாளர் தமிழரசன், ஐஎன்டியூசி  மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், மாமன்னர் புலித்தேவர் மக்கள் நல  இயக்க நிறுவனர் செல்லத்துரை, அனைத்து ரத்ததான கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்  காளிதாஸ், சுப்பையா, மாரியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : occupation area ,Kovilpatti Oya ,
× RELATED சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்...