×

ஆஞ்சநேயர் கோயில் அதிகாரி பற்றி அவதூறு பரப்பியதில் சமரசம்

நாமக்கல், டிச.12: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அதிகாரி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பிய விவகாரத்தில், திடீர் திருப்பமாக நேற்று எம்எல்ஏ முன்னிலையில் பட்டாச்சாரியார்கள் சமாதானம் அடைந்தனர். நாமக்கல் நரசிம்மசுவாமி கோயில் உதவி ஆணையராக, ரமேஷ் (48) என்பவர் கடந்த 4 ஆண்டாக பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்றது முதல் கோயில் பூஜை நடைமுறையில், பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தினார். வடைமாலை அபிஷேக முன்பதிவு கட்டணத்தை கோயிலில் செலுத்த வேண்டும் என உத்தரவு போட்டார். இதன் மூலம் பல ஆண்டாக பட்டாச்சாரியார்கள், பக்தர்களிடம் பணம் பெற்று தங்கள் இஷ்டம் போல பூஜை பொருட்களை வாங்கியதற்கு வேட்டு வைத்தார். மேலும்,
அனைத்து பட்டாச்சாரியார்களும் ஆஞ்சநேயர், ரங்கநாதர், நரசிம்மர் என 3 கோயிலிலும் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என்ற புதிய சூழலை உருவாக்கினார். இதற்கு சிலர் ஆதரவும், எதிப்பும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெறும் பூஜை வழிபாடுகள் மற்றும் கோயில் உதவி ஆணையர் ரமேஷின் செயல்பாடுகள் குறித்தும், வாட்ஸ்அப் குரூப்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள், கடந்த சில நாட்களாக வந்த வண்ணம் இருந்தது. உதவி ஆணையருக்கு ஆதரவான கருத்துகளும் வாட்ஸ்அப் குரூப்களில், அவரது நண்பர்கள் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், கோயிலை பற்றி அவதூறு கருத்துகளை பதிவிட்ட நபர் குறித்து, நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் உதவி ஆணையர் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 6ம் தேதி முதல் வெங்கடேச பட்டருக்கு கோயிலில் பூஜை செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மன உளைச்சல் அடைந்த வெங்கடேசன், தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சையில் சேர்ந்தார். ஒரே நாளில் குனமடைந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார். இந்த விவகாரம் கோயில் பக்தர்கள், ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று, காலை நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உதவி ஆணையர் ரமேஷ், எம்எல்ஏ பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில், பட்டாச்சாரியார்கள் நாகராஜன், ராஜா, விஜயநரசிம்மன், சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆஞ்சநேயர் கோயில் பூஜை வழிபாட்டு முறைகள், மடப்பள்ளி மாற்றம், சுவாமிக்கு அணிவிக்கப்படும் நகைகள் தொடர்பாக வாட்ஸ்அப் குரூப்களில் வலம் வரும் கருத்துக்களுக்கும், எங்களுக்கும் தொடர்பு கிடையாது. ஆண்டாண்டு காலமாக, மார்கழி மாத அமாவாசை அன்று தான், ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டும் மார்கழி அமாவாசையான வரும் 25ம்தேதி ஜெயந்தி விழா கொண்டாட நாள் குறிக்கப்பட்டு, உதவி ஆணையரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது,’ என்றனர்.இதுகுறித்து பாஸ்கர் எம்எல்ஏ., பட்டாச்சார்களிடம் கூறுகையில், ‘ஆஞ்சநேயரால் தான் நாமக்கல்லுக்கு பெருமை. நமது ஊர் கோயிலை பற்றி வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பாதீர்கள். பிரச்னையை உதவி ஆணையரிடம் பேசி, சரி செய்து கொள்ளுங்கள். வெங்கடேச பட்டரிடம் கோயிலுக்கு பூஜைக்கு போகும்படி கூறினேன். ஆனால், அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். உதவி ஆணையருடன் இணைந்து ஆஞ்சநேயருக்கும், பக்தர்களுக்கும் சேவை செய்யுங்கள்,’ என்றார். பின்னர், வெங்கடேச பட்டாச்சாரியாரை அழைத்து வரும்படி எம்எல்ஏ பாஸ்கர் கூறினார். கோயிலுக்கு வந்த அவர், கோயிலில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். பூஜை பணியை மட்டும் கவனிக்கிறேன். எனது வாட்ஸ்அப் குரூப்பில் கோயில் குறித்து, கருத்து பதிவிட்டது யார் என தெரியவில்லை. அந்த குரூப்பில் இருந்து நான் வெளியேறி விட்டேன். உதவி ஆணையர் பேசியதால் மனவேதனை அடைந்தேன். இனி நடந்ததை மறந்து பணியாற்றுவேன் என்றார்.

அப்போது அருகில் இருந்த உதவி ஆணையர் ரமேஷ், வெங்கடேச பட்டர் தொடங்கிய குரூப்பில் 46 பேர் இருக்கிறார்கள். அதில் தான் முதலில் அவதூறு மெசேஜ் வந்துள்ளது. பின்னர் அந்த குரூப்பில் இருந்து வெளியேறி, மெசேஜையும் அழித்துள்ளார் என எம்எல்ஏ பாஸ்கரிடம் கூறினார். இதையடுத்து பிரச்னையை மறந்து விட்டு, அனைவரும் இணைந்து பணியாற்றுங்கள் என எம்எல்ஏ கூறினார். இதற்கு உதவி ஆணையர் மற்றும் பட்டாச்சாரியார்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து வாட்ஸ்அப் அவதூறு விவகாரம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
அப்போது, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் குருசாமி, உறுப்பினர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர். அமைதி காத்த உதவி ஆணையர் பட்டாச்சாரியார்கள் மவுனம் ஆஞ்சநேயர் கோயிலுக்கு பிரஸ்மீட்டுக்கு வரும்படி நிருபர்களை அழைத்த உதவி ஆணையர், பிரஸ்மீட்டின் போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கோயில் பட்டர்கள் மூலமே, தனது கருத்துக்களை தெரிவித்தார். தன்னை கிறிஸ்தவர் போல சித்தரித்து வாட்ஸ்அப்பில் பரப்புவதாக எம்எல்ஏவிடம் கூறி வேதனைப்பட்டார். பிரஸ்மீட் முடிவில், பூஜை பணி மறுக்கப்பட்ட வெங்கடேச பட்டர், உதவி ஆணையரின் அருகில் சென்று சமரசம் பேசினார். வாட்ஸ் அப்பில் கூறப்படுவது போல, உதவி ஆணையர் கோயில் நடைமுறையில் ஏற்படுத்தியுள்ள புதிய மாற்றங்கள், பட்டாச்சாரியார்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதா? என நிருபர்கள் தொடர்ந்து கேட்டும், பட்டாச்சாரியர்கள் அனைவரும் மவுனமாக இருந்தனர்.

Tags : Anjaneyar ,temple official ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி