×

கிருஷ்ணகிரியில் பார்சல் லாரி மோதியதில் மின்கம்பங்கள் உடைந்தது

கிருஷ்ணகிரி, டிச.11: கிருஷ்ணகிரியில் பார்சல் லாரி மோதியதில் மின் கம்பங்கள் உடைந்ததால் சுமார் 12 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில், பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் அருகே சாலையோரம் மின்கம்பங்கள் இருந்தது.நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த பார்சல் லாரி ஒன்று, அங்கிருந்த ஒரு மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் மின்கம்பம் உடைந்ததுடன், அருகில் இருந்து மற்றொரு மின்கம்பமும், ஒயர்கள் இழுத்ததில் அதுவும் உடைந்தது. இதனால் சென்னை சாலை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சாக்கன் உத்தரவின் பேரில், உதவி பொறியாளர் கந்தசாமி தலைமையில் இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் 20க்கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியர்கள், உடைந்த மின் கம்பங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், உடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் நடும் பணியை மேற்கொண்டனர். முதற்கட்டமாக மின்சார ஒயர்களை மாற்றி 4 மணி நேரத்திற்கு பிறகு சில பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கினர். தொடர்ந்து மின்சார பராமரிப்பு பணிகள் மாலை 6 மணி வரை நடைபெற்றது. பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு புதிய கம்பங்கள் நடப்பட்டது. இதனால் சென்னை சாலையில் ஒரு பகுதியில் சுமார் 12 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் தடைப்பட்டது. மாலை 6 மணிக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டது.

Tags : Krishnagiri ,
× RELATED காய்ந்த மாமரங்களை அதிகாரிகள் ஆய்வு