×

சிறியூர் - சத்தியமங்கலம் சாலை அமையுமா?

ஊட்டி, டிச. 11: சிறியூர் - சத்தியமங்கலம் சாலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதி என்பதால் இச்சாலை அமைக்க வனத்துறை அனுமதி வழங்குமா என்பது கேள்வி குறியாகியுள்ளது. பதில் அளிக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஊட்டி அருகேயுள்ள மசினகுடி, மாயார், சிறியூர், ஆனைகட்டி, காங்கிரஸ் மட்டம் ஆகிய பகுதிகள் நீலகிரி வனக்கோட்டத்திற்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்தது. ஆனால், தற்போது இந்த வனப்பகுதி முதுமலை புலிகள் காப்பகம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது.இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை,  சுருள் கொம்பு மான்கள் உட்பட பல்வேறு வன விலங்குகள் வாழ்கின்றன. சிறியூர் பகுதியில் இருந்து மங்களப்பட்டி, தெங்குமரஹாடா வழியாக சத்தியமங்கலத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இச்சாலை அமைத்தால் பந்தலூர், கூடலூர், கேரள மாநிலம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குண்டல்பேட் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் வியாபாரிகள் எளிதில் சத்தியமங்கலத்தை அடைந்து அங்கிருந்து ஈரோடு, கோவைக்கு எளிதாக செல்லலாம். இச்சாலை வனப்பகுதிகளுக்கு நடுவே செல்வதால், இதை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். இச்சாலை அமைத்தால், வன விலங்குகளின் வழித்தடங்கள் மறிக்கப்படுவதோடு அவைகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பதால் தொடர்ந்து இச்சாலை அமைக்க வனத்துறை அனுமதி வழங்காமல் உள்ளது.

 சிறியூர் முதல் சத்தியமங்கலம் வரை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி தற்போது புலிகள் காப்பகங்களாக மாறிவிட்டது. சாதாரணமாகவே, புலிகள் காப்பகத்திற்குள் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சாலைகளிலும் இரவு நேரங்களில் செல்ல அனுமதியில்லை. எனவே, சாலை அமைப்பது சாத்தியமா என்பது கேள்வி குறியாக உள்ளது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இச்சாலை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள முதன்மை வனப்பாதுகாவலர் தலைமையில் ஒரு குழு வந்தது. ஆய்வும் மேற்கொண்டது. ஆனால், அந்த ஆய்வின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. அந்த அறிக்கை தொடர்பான பதிலை இது வரை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தமிழக அரசும் வெளியிடவில்லை. நீலகிரி மாவட்டத்தில் மழைக் காலங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது. அப்போது மற்ற மாவட்டங்களை இணைக்கும் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்படுகிறது. குறிப்பாக, குன்னூர் - மேட்டுப்பாளையம், கோத்தகிரி மேட்டுப்பாளையம், மஞ்சூர் - காரமடை சாலைகளில் தடை ஏற்படும் போது மாற்று சாலையின்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அவசர மருத்துவ சேவைகளுக்கு கூட வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இச்சாலை அமைப்பதன் மூலம் மழைக் காலங்களில் மாற்றுப் பாதையாகவும் பயன்படுத்த முடியும். அதுமட்டுமின்றி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள மக்கள் மருத்துவ தேவைகளுக்கு விரைவாக சமவெளிப் பகுதிகளை அடைய வாய்ப்புள்ளது. எனவே, சிறியூர் - சத்தியமங்கலம் சாலையை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், இச்சாலை அமைப்பதில் தமிழக அரசின் நிலை குறித்து இது வரை எவ்வித பதிலும் வெளியிடப்படவில்லை. சிறியூர் - சத்தியமங்கலம் சாலை சாத்தியமா அல்லது கிடப்பில் போடப்பட்டதா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கூடலூர் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Chellur - Sathiyamangalam Road ,
× RELATED புலிகள் காப்பகம் வனப்பகுதியில் தீ ஏற்படாமல் பாதுகாக்க விழிப்புணர்வு