×

திருக்கார்த்திகை தீப திருவிழா கோலாகலம் திருச்செந்தூர், கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருச்செந்தூர்,  டிச. 11: திருக்கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருச்செந்தூர்  சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் சொக்கப்பனையில் நாரணி தீபம்  ஏற்றப்பட்டது. அறுபடை வீடுகளில் 2வது  படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருக்கார்த்திகையை  முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 5.30  மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு அபிஷேகமும் நடந்தது. இதைத் தொடர்ந்து  மற்ற கால பூஜைகள் நடந்தன. மாலை 6 மணிக்கு கோயில் 108 மகாதேவர்  பிரகாரத்தில் 108 திருவிளக்கு பூஜையை தொடர்ந்து ஒவ்வொரு சன்னதியிலும் நாரணி  தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை  அமபாளுடன் எழுந்தருளி மாலை 7 மணிக்கு சண்முகவிலாசம் வந்தடைந்தார். அங்கு  தீபாராதனை ஆனதும் நாரணி தீபத்தை கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் நாரணி  தீபம் மூலம் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா,  முருகனுக்கு அரோகரா என சரண கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன்  தங்கத்தேரில் எழுந்தருளி கிரிபிரகாரம் வலம் வந்து கோயிலை வந்தடைந்தார்.

இதே போல் திருக்கோயிலை சேர்ந்த சிவக்கொழுந்தீஸ்வரர் சமேத அனந்தவல்லி அம்பாள் கோயிலில்  அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 7.30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், அதைத்தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு   சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. கோவில்பட்டி:  கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாளையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 9 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கும்ப பூஜை, சண்முகர் ஜெபம் நடந்தது.தொடர்ந்து மூலவருக்கு 21 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் 23 கிலோ எடையிலான வெண்கல சட்டியில் மகா தீபம் ஏற்றி சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு பூஜைகளை ஹரிஹரன், அரவிந்த், சுப்பிரமணியன் வீரபாகு பட்டர் முன்னின்று நடத்தினர்.  இதை திரளானோர் தரிசித்தனர். தொடர்ந்து மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் கார்த்திகேயன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விழாவில்  கோயில் செயல் அலுவலர் ரோஷினி, தலைமை எழுத்தர் ராமலிங்கம் மற்றும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்கத் தலைவர் பழனிசெல்வம் தலைமையில்  குடும்பத்தினர் செய்திருந்தனர். இதேபோல் கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையை தொடர்ந்து 5.30 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இரவு 7 மணிக்கு கோயில்  முன்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது. இரவு 7.30 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடந்தது. விழாவில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

Tags : Thirukarthika Deepa Festival ,temples ,Kovilpatti ,Thiruchendur ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா