×

2020ம் ஆண்டு கோடைக்கால மலர் கண்காட்சிக்கு நாற்று நடவு பணி

ஊட்டி, டிச. 10: 2020 மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்கான மலர் நாற்று நடவு பணிகள் இம்மாதம் இறுதி வாரத்தில் தாவரவியல் பூங்காவில் துவங்குகிறது.  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், ஆண்டு தோறும் மே மாதம் தோட்டக்கலைத்துறை சார்பில், மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. மலர் கண்காட்சியின் போது 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படும். மலர் கண்காட்சி தினத்தன்று அந்த தொட்டிகள் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு அழகான வடிவங்களில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்.  மேலும், பூங்கா முழுவதிலும் நடவு செய்யப்பட்டுள்ள பல லட்சம் மலர் செடிகளில் ஏப்ரல் மாதம் முதல் மலர்கள் பூக்க துவங்கிவிடும். அனைத்து மலர் செடிகளிலும் பூக்கள் பூத்துக்குலுங்கும். உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பூக்கும் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அவைகள் அனைத்திலும் பூக்கள் பூத்து குலுங்கும். இந்த மலர்கள் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதற்காக ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் விதைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, நவம்பர் மாதத்தில் விதை விதைக்கும் பணிகள் துவக்கப்படும்.

 கடந்த மாதம் விதைகள் விதைக்கும் பணிகள் முடிந்த நிலையில், 6 மாதங்களுக்கு பின் பூக்கும் மலர் செடிகளான பெகோனியா, ரெகன்கிளாசம், வால்சம், சோலியாஸ், லிசியந்தால், சால்வியா மற்றும் டென்பீணம் ஆகிய வகைகளை சேர்ந்த மலர் நாற்றுகள் தாவரவியல் பூங்காவின் மேல் பகுதியில் நர்சரியில் தயார் நிலையில் உள்ளது. டெல்பீனியம், சால்வியா, ஹெர்மினா, ஹோலிஆக், வென்டர் ஹைனஸ் ஆகிய மலர் செடிகளின் நாற்றுக்கள் இத்தாலியன் பூங்கா அருகேயுள்ள நர்சரியில் நாற்றுக்கள் தயார் நிலையில் உள்ளது. தற்போது நாற்றுகள் தயாரான நிலையில் இம்மாத இறுதியில் நாற்று நடவு பணி துவக்கப்படவுள்ளது. இதற்காக, பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் மண் நிரப்பும் பணி ஓரிரு நாட்களில் துவக்கப்படவுள்ளது.   இது தவிர பூங்கா முழுவதிலும் உள்ள பாத்திகள் சீரமைக்கப்பட்டு நாற்று நடவு பணிகளுக்காக தயார் செய்யப்படுகிறது. தோட்டகலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆண்டு தோறும் மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சிக்காக மலர் செடிகளை தயார் செய்யும் பணி டிசம்பர் மாதத்தில் துவங்கும். 4 முதல் 6 மாதங்கள் வரை வளரும் மலர் செடிகளின் விதைகள் ஏற்கனவே நடவு செய்யப்பட்ட நிலையில், தற்போது நாற்றுக்களாக வளர்ந்துள்ளன. மலர் தொட்டிகள் மற்றும் பாத்திகளில் நடவு செய்யும் பணிகள் இம்மாதம் இறுதி வாரத்தில் துவக்க திட்டமிட்டுள்ளோம்,’’ என்றனர்.

Tags : Summer Flower Show ,
× RELATED ஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி...