உணவுப்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் அக்மார்க் சான்று பெறலாம்

கோவை, டிச. 10: கலெக்டர் ராஜாமணி கூறியுள்ளதாவது: தரமான உணவு பொருட்களின் தரச்சான்று நிர்ணயம் செய்திட மத்திய மற்றும் மாநில அரசால் செயல்படுத்தப்படும் திட்டம், ‘அக்மார்க்’. 1937ம் ஆண்டு வேளாண் விளைபொருட்கள் தரம் பிரிப்பு மற்றும் விற்பனை சட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அளவில் ‘அக்மார்க் தரச்சான்று வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் அக்மார்க் ஆய்வகங்கள் மூலம் அளிக்கப்படுகிறது. அக்மார்க் தரச்சான்று பெறுவது ஒரு தன்னார்வ திட்டமாகும்.அக்மார்க்கின் கீழ் சான்றளிக்கப்படும் வேளாண் விளைபொருட்கள் உணவு எண்ணெய் வகைகள், மசாலாப்பொருட்கள், நெய், வெண்ணெய், தேன், பேரீட்சை, முந்திரி, போன்ற 233 விளைபொருட்களுக்கு தரச்சான்று வழங்கப்படுகிறது. மேற்குறிப்பிட்டுள்ள உணவுபொருட்களை உற்பத்தி செய்யும் அல்லது சிப்பமிடும் தனியார் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அக்மார்க் சான்றினை பெறலாம்.அக்மார்க் உரிம கட்டணம் ரூ.10 ஆயிரம், 5 ஆண்டுகள் செல்லுபடியாகும், உரிமம் புதுப்பித்தல் கட்டணம் ரூ.5 ஆயிரம், மாநில அரசு தரம்பிரிப்பு கட்டணம் குவின்டாலுக்கு ரூ.5 முதல் ரூ.25 வரை பொருட்களுக்கேற்ப மாறுபடும். மத்திய அரசு முத்திரைச்சான்று கட்டணம் குவின்டாலுக்கு ரூ.10 முதல் ரூ.120 வரை பொருட்களுக்கு ஏற்ப மாறுபடும்.

இக்கட்டணங்கள் அனைத்தும் (bharatkosh.gov.in) என்ற இணையதளத்தின்மூலம் செலுத்தலாம். அக்மார்க் ஆய்வகங்களில் உணவுப்பொருட்களின் கலப்படம், ஈரப்பதம், அமிலத்தன்மை போன்ற பகுப்பாய்வுகள் செய்யப்பட்டு தரமான பொருட்களுக்கு சான்று வழங்கப்படுகிறது.அக்மார்க் தரச்சான்று பெறுவதால் உற்பத்தியாளர்கள் அவர்களது பொருட்களுக்கு நல்ல விலையும் மற்றும் நுகர்வோர்களிடமிருந்து ஒரு நல்ல நம்பிக்கையையும் பெறுவதற்கு வாய்ப்பு அளிக்கிறது. அக்மார்க் பொருட்களை வாங்குவதால் நுகர்வோர்களுக்கு தரமான பொருட்களுக்கான உத்தரவாதத்தை அளிக்கிறது. கோவை மாவட்டத்தில் அக்மார்க் ஆய்வகம், வேளாண்மை துணை இயக்குநர், (வேளாண் வணிகம்) அவர்களது கட்டுப்பாட்டில், கோவை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம், ராமநாதபுரம், திருச்சி சாலையில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்களை (dmi.gov.com) இணையதளம் மூலமாகவும் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), கோவை அவர்களை அணுகியும் பெற்றுக் கொள்ளலாம்.

Related Stories:

>