×

அண்ணாநகர் பகுதியில் பைக் எண்ணை காரில் பொருத்தி சுற்றி திரிந்த வாலிபர் சிக்கினார்: சினிமா காட்சி போல் போலீசார் மடக்கினர்

அண்ணாநகர்: சிக்னலில் விதிமுறைகளை மீறும் வாகனங்களின் நம்பரை வைத்து  உரிமையாளர்களுக்கு நேரடியாக அபராத நோட்டீஸ் வழங்கும் கண்காணிப்பு கேமரா சென்னை அண்ணாநகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக விதிமுறை மீறி கார் ஓட்டியதாக, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்த ஷேக் என்பவருக்கு அபராத நோட்டீஸ் சென்றுள்ளது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், போக்குவரத்து போலீசாரிடம் சென்று, ‘‘தன்னிடம் கார் ஏதும் இல்லை என்றும், தன்னிடம் பைக் மட்டுமே உள்ளது,’’ என ஆணவங்களை காண்பித்து கூறினார்.

இதையடுத்து, பைக் பதிவு எண்ணை வைத்து கார் ஓட்டி வரும் நபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அண்ணாநகர் பகுதியில் அந்த கார் கடந்து செல்வதை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்த போக்குவரத்து போலீசார் அந்த காரை பின் தொடர்ந்தனர். அந்த கார் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப நின்றபோது, போலீசார் அந்த காரை மடக்கினர். அப்போது, காரை ஓட்டி வந்த வாலிபர், போலீசாரை ஏற்றுவதுபோல் வேகமாக சென்று தப்பினார். இதுகுறித்து போலீசார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அந்த காரை நடுவாங்கரை அருகே போலீசார் மடக்கிப் பிடித்து அரும்பாக்கம் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? எதற்காக நம்பரை மாற்றி ஓட்டினார் என்பது குறித்து அரும்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Anna Nagar ,
× RELATED சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக...