×

மதுராந்தகம் ஏரியை அதிகாரிகள் ஆய்வு

மதுராந்தகம், டிச.4: செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. 23.3 அடி ஆழம் கொண்ட இந்த ஏரியில், கடந்த ஆண்டு பருவமழை இல்லாததால், தண்ணீர் நிரம்பவில்லை. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், இந்த ஏரியின்முழு கொள்ளளவில் சுமார் 21 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. இதையொட்டி, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மீட்பு துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். கலெக்டர் ஜான்லூயிஸ், எஸ்பி கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 924 ஏரிகள் உள்ளன. அதில், 550 ஏரிகள் நிரம்பியுள்ளன. மதுராந்தகம் ஏரியும் நிரம்பும் சூழலில் உள்ளது. ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஏரியில் இருந்து உபரி தண்ணீர் கிளியாற்றின் வழியாக திறக்கும்போது, கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசர தொலைபேசி எண்களான 1070, 1077 ஆகியவற்றில் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு மழை வெள்ளத்தால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். பல்வேறு அரசு எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. மேலும், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் என அறியப்பட்டுள்ள இடங்களில் வருவாய் துறையினர் மூலம் தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை தரப்படும். மக்களும் தண்ணீர் செல்லும் பகுதிகளில் நின்று செல்பி எடுப்பது வேகமாக தண்ணீர் செல்லும் பகுதிகள் மற்றும் ஆழமான பகுதிகளில் குளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. என்றார்.

Tags :
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் கொள்முதல்...