×

கொட்டும் மழையில் மடிக்கணினி கோரி மாணவிகள் போராட்டம் திருப்புத்தூரில் பரபரப்பு

திருப்புத்தூர், டிச. 3:  திருப்புத்தூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த பழைய மாணவிகள் கொட்டும் மழையில் மடிககணினி வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்புத்தூர் நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஆண்டு 2018- 2019 பன்னிரண்டாம் வகுப்பு பயின்று தற்போது உயர்கல்வி பயின்று கொண்டிருக்கிற மாணவிகளுக்கு இந்த மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்த மடிக்கணினி வழங்கும் நிகழ்வை கேள்விப்பட்ட 2017 - 2018ம் ஆண்டு இப்பள்ளியில் பயின்ற மாணவிகள் பள்ளி வளாகம் முன்பு திரண்டனர். பின்னர் அங்கு மாணவிகள் தங்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்றும், தங்களுக்கு பின்னால் பயின்ற மாணவிகளுக்கு வழங்குவது நியாயம்தானா? என்றும் பள்ளி தலைமையாசிரியர் பாலதிரிபுரசுந்தரியிடம் கேள்வி கேட்டனர். அதற்கு சரியான பதில் சொல்லாததால் ஆத்திரமடைந்த மாணவிகள் திடீரென மழையையும் பொருட்படுத்தாமல் பள்ளிக்கு வெளியில் வந்து நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் ஜெயலெட்சுமி, துணை தாசில்தார் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர்கள் சின்னையா, பாலமுருகன் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்டோர் வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவிகள், பள்ளி தலைமையாசிரியர் மடிக்கணினி வழங்கும் நிகழ்வு பற்றி தெளிவுபடுத்த வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றும் தாசில்தாரிடம் குற்றம்சாட்டினர். மேலும் தங்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இடத்தை விட்டு நகர மாட்டோம் என்றும் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தாசில்தார் மாணவிகளுடன் இணைந்து பள்ளி தலைமையாசிரியரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குறைவான மடிக்கணினி வந்துள்ளதால் அதை சென்ற ஆண்டு பள்ளியில் படித்த பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவிகளுக்கு வழங்க ஆணை வந்துள்ளதாகவும்,  மூன்றாவது நான்காவது கால திட்டத்தின்போது 2017- 2018ல் படித்த மாணவிகளுக்கும், 12ம் வகுப்பில் தோல்வியடைந்த, படிப்பை பாதியில் கைவிட்ட மாணவிகளுக்கும் வழங்குவதற்கான கால திட்டம் உள்ளதாகவும், நிச்சயமாக மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றும் தாசில்தாரிடம் தலைமையாசிரியர் உறுதியளித்தார். பின்பு தாசில்தார் எடுத்துக் கூறியதை தொடர்ந்து மாணவிகள் கவலையுடன் கலைந்து சென்றனர்.

Tags : Thiruputhur ,
× RELATED திருத்தளிநாதர் கோயிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை