×

தொடர் மழையால் அழுகிய தக்காளியை ஏரியில் கொட்டும் அவலம்

போச்சம்பள்ளி, டிச.3: போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழை காரணமாக அழுகிய தக்காளிகளை விவசாயிகள் ஏரிகளில் கொட்டி விட்டு செல்கின்றனர். போச்சம்பள்ளி, புலியூர், ஓலைப்பட்டி, பனங்காட்டூர், மத்தூர், தாதம்பட்டி, வீரமலை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், தக்காளி விலை உயர்ந்தது. இந்நிலையில், போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், தக்காளி தோட்டங்களில் மழை நீர் தேங்கி, தக்காளி செடிகளிலேயே அழுகி வருகிறது. அழுகிய தக்காளியை விற்பனை செய்ய முடியாது என்பதால், விவசாயிகள் மீன்களுக்கு உணவாக ஏரிகளில் கொட்டி விட்டு செல்கின்றனர்.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த 2 மாதங்களுக்கு முன், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின்  விலை அதிகரித்தது. விளைச்சல் குறைந்ததால் ஒரு கிலோ தக்காளி ₹50க்கு விற்பனையானது. தற்போது தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருவதால், விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அழுகிய தக்காளியை விற்பனை செய்ய முடியாது என்பதால், ஏரிகளில் கொட்டி விட்டு செல்கிறோம். தற்போது தக்காளிக்கு நல்ல விலை கிடைத்தும், விவசாயிகளுக்கு பயனில்லை,’ என்றனர்.


Tags : lake ,
× RELATED புஷ்பரத தேரை காலை 10 மணிக்கே வேலங்காடு...