×

சூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

சூளகிரி, டிச.3: சூளகிரி அருகே ஏ.செட்டிப்பள்ளி ஊராட்சியில் குடிநீர் வழங்காததை கண்டித்து, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சூளகிரி ஒன்றியம், ஏ.செட்டிப்பள்ளி ஊராட்சி ஜோகிரிபாளையம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டதால், கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், சூளகிரி-பேரிகை சாலையில், ஜோகிரிபாளையம் பிரிவு ரோட்டில் நேற்று காலை காலி குடங்களுடன் திரண்டு, மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இது குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீஸ் எஸ்ஐ யுவராஜ் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மின்மோட்டாரின் பழுது நீக்கப்பட்டு, விரைவில் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  


Tags : Sulagiri ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி