×

காட்டு யானைகள் அட்டகாசம் மளிகைக்கடையை சூறையாடியது

மஞ்சூர், டிச.1: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. இப்பகுதியில் நீர் மின் நிலையம் மற்றும் மின் வாரிய ஊழியர் மற்றும் தனியார் குடியிருப்புகள் அமைந்து உள்ளது. இந்நிலையில், கெத்தை பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் அப்பகுதியை சுற்றிலும் விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதுடன் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மின் வாரிய குடியிருப்பில் உலா வந்த 4 காட்டு யானைகள் சாலையோரத்தில் இருந்த ராமப்பன் என்பவரது மளிகைக்கடையின் கதவை உடைத்தது. தொடர்ந்து கூட்டத்தில் இருந்த யானை ஒன்று கடைக்குள் புகுந்து அங்கிருந்த அலமாரிகளை கீழே தள்ளி கடையில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பெரும்பாலான மளிகை பொருட்களை சூறையாடியது.

சத்தம் கேட்டு ராமப்பன், அவரது மகன் ராஜேந்திரன் உள்ளிட்டோர் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, கடையை சுற்றி 3 யானைகள் நிற்பதையும் கடைக்குள் மற்றொரு யானை பொருட்களை நாசம் செய்வதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வந்த வனவர் ரவிக்குமார் விரைந்து வந்து அக்கம், பக்கத்தினர் உதவியுடன் பட்டாசுகளை வெடித்தும், சத்தம் எழுப்பியும் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர்.
இதேபோல் நேற்று முன்தினம் காலை கோவையில் இருந்து மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு சென்ற திருமண கோஷ்டியினரின் 2 வாகனங்களை கெத்தை மாரியம்மன் கோயில் அருகே காட்டு யானைகள் வழிமறித்தது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடுக்காட்டில் பயணிகள் தவித்தனர். இதைத்தொடர்ந்து யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்ற பிறகே திருமண கோஷ்டியினர் புறப்பட்டு சென்றனர்.

Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ