×

கப்பலூர் டோல்கேட்டில் பாஸ்டேக் ஸ்டிக்கர் பற்றாக்குறை கார் ஓட்டுநர்கள் கடும் அவதி

திருமங்கலம், நவ.29: கப்பலூர் டோல்கேட்டில் காருக்கான பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் நாளை மறுநாள் முதல் நாடு முழுவதும் டோல்கேட்டுகளில் பாஸ்டேக் கட்டண முறையை அமல்படுத்த உள்ளது. இதற்கான அறிவிப்பு அனைத்து டோல்கேட்டுகளிலும் அறிவிக்கப்பட்டு வருகிறது. திருமங்கலம் அடுத்த கப்பலூர் டோல்கேட் தென்மாவட்டத்தின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள முக்கிய டோல்கேட்டாகும். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த டோல்கேட்டினை கடக்க வேண்டியுள்ளது.

டிசம்பர் 1ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டணம் அமல்படுத்தப்பட உள்ளதால் கடந்த ஒரு வாரமாக கப்பலூர் டோல்கேட்டில் பாஸ்டேக் ஸ்டிக்கர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாகனோட்டிகள் இங்கு ஸ்டிக்கரை பெற்று வந்தனர். இந்தநிலையில் கடந்த இருதினங்களாக கப்பலூர் டோல்கேட்டில் கார்களுக்கான பாஸ்டேக் ஸ்டிக்கர் இருப்பு இல்லை. இதனால் கார் வைத்துள்ளவர்கள், வாடகை கார் ஓட்டுபவர்கள் அனைவரும் ஸ்டிக்கர் கிடைக்காமல் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கப்பலூர் டோல்கேட்டில் கேட்ட போது, காருக்கான ஸ்டிக்கர் விற்பனையாகி விட்டது. ஸ்டாக் இல்லை. அருகேயுள்ள வங்கிகளில் சென்று வாங்கி கொள்ளலாம் என தெரிவித்தனர்.

அதே நேரத்தில் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வங்கிகளிலும் காருக்கான பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லை. இதனால் கார் வைத்துள்ள வாகனோட்டிகள் அவதிக்குள்ளாகினர். அனைத்து வாகனங்களுக்கும் முறையாக பாஸ்டேக் ஸ்டிக்கர் விநியோகம் செய்த பின்பு இந்த நடைமுறையை அமல்படுத்தினால் நல்லது என வாகனோட்டிகள் தெரிவித்தனர்.

Tags : car drivers ,Kapalur Dolgate ,
× RELATED நட்சத்திர ஓட்டல் ஊழியர்கள் தாக்குதல் கால் டாக்சி டிரைவர்கள் போராட்டம்