×

மேற்கு முகப்பேர் பகுதியில் தாய், மகளுக்கு டெங்கு: பொதுமக்கள் பீதி

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள வஜ்ரா என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த குடியிருப்பு மற்றும் இதை சுற்றியுள்ள குடியிருப்பு, சாலைகளில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியுள்ளது. இந்த மழைநீரில் கழிவுநீரும் கலந்துள்ளதால் கொசு உற்பத்தி மையமாக மாறியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பலருக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த நிலையில், மேற்கண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் எலிசபெத் (40), அவரது மகள் கெய்ரீன் (4) ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. மருந்து, மாத்திரை சாப்பிட்டும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால், உறவினர்கள் அவர்கள் இருவரையும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, தாய், மகள் இருவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘‘முகப்பேர் மேற்கு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும், என மாநகராட்சி மண்டல சுகாதார அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேங்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகரித்து மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது, தாய், மகளுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னை திருமங்கலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக இறந்த சம்பவம் நடைபெற்றும் அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்படுகின்றனர். எனவே, பெரிய அளவில் டெங்கு பரவுவதற்கு முன், டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : panic ,West Mugabe: Public ,
× RELATED மது அருந்தியது, கஞ்சா புகைத்தது,...