×

செலவுக்கு பணம் தர மறுத்த ஆத்திரத்தில் பாட்டியை கல்லால் தாக்கி கொன்ற பேரன் கைது கலசபாக்கம் அருகே பயங்கரம்

கலசபாக்கம், நவ.29: கலசபாக்கம் அருகே செலவுக்கு பணம் தர மறுத்த ஆத்திரத்தில், தனது பாட்டியை பேரனே கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி சரோஜா(65). இவர்களுக்கு 2 மகன், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு நாராயணசாமி இறந்து விட்டதால் சரோஜா மட்டும் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில், சரோஜாவின் இளைய மகள் கண்ணகி(28). உடல் ஊனமுற்றவர். இவர் தனது பிரசவத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவனாம்பட்டு வந்தார். கடந்த வாரம் சரோஜாவின் மூத்த மகள் வழி பேரனான, சென்னையில் மேஸ்திரி வேலை செய்யும் கல்லறைபாடி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்ற செல்வராஜ்(23) என்பவரும் கிராமத்திற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு கண்ணகி தனது அறையில் தூங்க சென்றார். ஹாலில் சரோஜாவும், செல்வராஜூம் படுத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை கண்ணகி எழுந்து பார்த்தபோது, சரோஜா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அலறி கூச்சலிட்டார். பின்னர், கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், சரோஜா கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் வீட்டில் இருந்த சரோஜாவின் பேரன் செல்வராஜ் திடீரென மாயமானதால் அவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.இதற்கிடையில், செங்கம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த அவரை போலீசார் பிடித்து, விசாரணை நடத்தினர். அதில் சரோஜாவை, செல்வராஜ் கொலை செய்தது தெரியவந்தது.அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது;நேற்று முன்தினம் இரவு செலவுக்கு பணம் வேண்டும் என பாட்டி சரோஜாவிடம் கேட்டேன். ஆனால் அவர், தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, ஆத்திரமடைந்த நான் அங்கிருந்த கல்லால் பாட்டியை சரமாரியாக தாக்கினேன். இதில் அவர் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதையடுத்து, பாட்டி அணிந்திருந்த ஒரு சவரன் தங்க கம்மலை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டேன். அப்போது, எனது மாற்றுத்திறனாளி சித்தி கண்ணகி வேறு ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்ததால் அவருக்கு எதுவும் தெரியாது.

Tags : Arrest ,grandson ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...