×

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக 10 ரெட் டீலக்ஸ் பஸ்கள் விரைவில் இயக்கம்

கோவை, நவ.29: அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவை மாநகரில் 40 சிவப்பு நிற சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 10 புதிய சிவப்பு சொகுசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அரசு  போக்குவரத்து கழக கோவை கோட்டத்தில் ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய  4 மண்டலங்கள் உள்ளன. இவைகளில் 1500க்கும் மேற்பட்ட மப்சல் பேருந்துகளும்,  770 டவுன் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இவைகளில் காலாவதியான  பேருந்துகள் பெரும்பாலானவை மாற்றப்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் பி.எஸ் 4 தரத்துடன் 800க்கும் அதிகமான புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.  கோவை மாநகரில் இயக்கப்படும் டவுன் பேருந்துகள் பெரும்பாலும்  ஆயுள்காலம் முடிந்த நிலையில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதே  வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் டவுன் பஸ்கள் புதிதாக இயக்கப்பட்டு  வருகின்றன. இதனால் அரசு பேருந்துகளில் பயணிகளின் வருகை குறைந்த வண்ணம்  இருந்தது. இதை சரிகட்ட மாநகரில் தற்போது 50 புதிய சிவப்பு நிற டீலக்ஸ்  பேருந்துகள் இயக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். தானியங்கி கதவு, அவசர கால வழி, சென்சார், தீயணைப்பு கருவி,  உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் முதற்கட்டமாக 40 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.மீதமுள்ள 10 சிவப்பு டீலக்ஸ் பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளது. அவை மருதமலை கிளைக்கு 4, அன்னூர் கிளைக்கு 1, உக்கடம் 1 கிளைக்கு 5 என வழங்கப்பட உள்ளன. புதிய பேருந்துகள் 70, 111, 11, 55சி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.

Tags : Red Deluxe ,State Transport Corporation ,
× RELATED முகூர்த்தம், வார இறுதி நாட்களை...