×

சைக்கிள் பேரணியாக வந்த வெளிநாட்டினர் பள்ளி மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி

கிருஷ்ணகிரி, நவ.28: யோகா, மரம் வளர்த்தல், இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, பை சைக்கிள் யோகிஸ் என்ற அமைப்பில் உள்ள வேலூரை சேர்ந்த அஜய்மணிராஜ்(32), நார்வேயை சேர்ந்த ஷிவாங்கர்(27), அமெரிக்காவை சேர்ந்த ஹானி(26) ஆகியோர், கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை சைக்கிளில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள், கடந்த செப்டம்பர் 3ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கி நேற்று காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைக்கு வந்தனர். இதுகுறித்து அஜய்மணிராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ‘யோகாவின் அவசியம் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டிற்கு 4,500 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளோம்.
இப்பயணத்தில், யோகாவின் அவசியம், யோகாவால் எற்படும் நன்மைகள், மரம் நடுவது, மரங்கள் குறைவால் ஏற்படும் தீமைகள், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், சைக்கிள் பயணம் மேற்கொள்வதன் அவசியம் போன்றவை குறித்து பிரசாரம் செய்து வருகிறோம். இதுவரை 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 நாட்கள் என, 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் யோகா பயிற்சி அளிக்கிறோம். தொடர்ந்து ஓசூர், பெங்களூரு மற்றும் ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் வழியாக சென்று இமயமலை அடிவாரத்தில் பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளோம்,’ என்றார்.காவேரிப்பட்டணத்தில் நேற்று 1,600 மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தனர். இன்று (28ம்தேதி) 1600 பேருக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை யோகா ஆசிரியர் கவுதம் மற்றும் ஹரி ஆகியோர் செய்துள்ளனர்.

Tags : alien school students ,yoga workshops ,bicycle rally ,
× RELATED எஸ்ஏ கல்லூரியில் மிதிவண்டி பேரணி