×

குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அலங்கார நீரூற்றுகள் திடீர் அகற்றம்

நாகர்கோவில், நவ.28:  குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலங்கார நீரூற்றுகள் திடீரென்று அகற்றப்பட்டுள்ளது.  குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நாகர்கோவிலில் செயல்படுகிறது. இங்கு சீரமைப்பு பணிகள் அவ்வப்போது தொடர்ந்து நடந்து வருகின்றன. அலுவலகத்தின் பிரதான வாசல் பகுதியில் மகாமேரு மாளிகை வடிவில் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மேற்கு பகுதியில் காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டு பஸ் ஸ்டாப் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.  இதையொட்டி ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த வாசல் ஒன்று நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இது தவிர அலுவலக வளாக பகுதியில் வாகனங்கள் நிறுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலுவலகத்தின் முன் பகுதியில் 2 அலங்கார நீரூற்றுகள் காணப்பட்டன. இவை நன்கு இயங்கி வந்த நேரத்தில் பார்க்க ரம்மியமாக காட்சியளித்து வந்தன.

ஆனால் நீரூற்றுகளை அவ்வப்போது பராமரிப்பதும், அப்படியே விட்டு விடுவதும் வழக்கமாக இருந்து வந்தது. இதனால் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவதும், அதனை கட்டுப்படுத்த மீன்கள் வளர்ப்பதும், மீன்கள் செத்து மிதப்பதும் என்று சூழல் காணப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்துவந்த 2 நீரூற்றுகளும் திடீரென்று அகற்றப்பட்டன. அந்த இடங்களில் மண் கொட்டி மூடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருந்து வந்த இடநெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை போன்று கலெக்டர் அலுவலக முன் பகுதியில் பல லட்ச ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அமைக்கப்பட்ட சில மாதங்களாக அதில் உள்ள தாவரங்களையும், புற்களையும் வெட்டிவிடுவது, தினசரி தண்ணீர் பாய்ச்சுவது, குப்பைகள் தேங்காமல் பராமரிப்பது போன்றவை நடந்தது. இதற்காக பணியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பூங்காவை பராமரிப்பது மட்டுமே பணியாகவும் இருந்தது. இந்த நிலையில் தற்போது பணியாளர்கள் எவரும் இங்கு பராமரிப்பு பணிக்கு வருவது இல்லை. தற்போது போதிய பராமரிப்பின்றி சருகுகள் தேங்கி பூங்கா முழுவதும் புதர்மண்டி காணப்படுகிறது. எனவே பூங்காவும் வரும் நாட்களில் அகற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

Tags : removal ,springs ,office ,Kumari District Collector ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...